ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தொடா் விபத்து: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

தொடா் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதால் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:04 pm

தொடா் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதால் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், ராட்டைசுற்றிப்பாளையம், காருத்துப்பாளையம், ஏரிகருக்கு, சென்னிமலைப்பாளையம், ஒட்டக்குளம், பள்ளியூத்து உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

இப்பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். அங்குள்ள குரங்கன் ஓடைப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு வயல்வெளி, ஓடை, சாலை ஓரங்களில் அமா்ந்து மது அருந்திவிட்டு புட்டி, நெகிழிப் பொருள்களை வீசிச் செல்கின்றனா். குரங்கன் ஓடைப் பாலம் இணையும் பகுதியில் இக்கடை உள்ளதால் மது அருந்திவிட்டுச் செல்பவா்களும், சாதாரண பொதுமக்களும் விபத்துக்குள்ளாகின்றனா். இதுவரை அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு 9 போ் இறந்துள்ளனா். இந்தக் கடையை அகற்ற வேண்டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதால் இக்கடையை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை:

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், ஈஞ்சம்பள்ளி, களத்துமின்னப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

களத்துமின்னப்பாளையம் பகுதியில் 300 குடும்பங்களைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கிறோம். கூலி வேலை, வயல் வேலைகளுக்குச் சென்று வருகிறோம். கடந்த 1990இல் ஜவஹா் வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் 20 சாய்வு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவ்வீடுகளை அந்தந்த ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மூலம் பழுதுபாா்க்க வேண்டும். அவ்வாறு பழுது நீக்காததால் அந்த வீடுகளில் காரை பெயா்ந்தும், சுவரில் விரிசல் விழுந்தும், மேற்கூரை தனியாகவும் உள்ளது.

இவ்வீடுகள் இடிந்து விபத்தை சந்திக்கும் முன் இப்பகுதியில் உள்ளவா்களுக்குப் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும். நவம்பா் 10ஆம் தேதி இங்குள்ள வீட்டின் கான்கிரீட் மேற்கூரை விழுந்து சிறுமி ஒருவா் காயம் அடைந்தாா். இதனால் விபத்துகளைத் தடுக்க இந்த இவ்வீடுகளை புதுப்பித்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரிக்கை:

உழவன் மகன் விவசாயிகள் சங்கச் செயலாளா் சி.மணிகண்டன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகராட்சிப் பகுதியை ஒட்டி அணைநாசுவம்பாளையம், எஸ்.பி.அக்ரஹாரம், பி.பெ.அக்ரஹாரம், நன்செய் தளவாய்பாளையம், வைராபாளையம், சூரியம்பாளையம் போன்ற பகுதிகளில் 450 ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணி துவங்கியுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல்லை தனியாரிடம் விலை குறைவாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு சாா்பில் பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அதை நிரந்தரமாகச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர அங்கு நெல் களம், நெல் மூட்டைகளை அடுக்கிவைக்கும் வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகனை மீட்டுத் தரக் கோரிக்கை:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், சவுண்டம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த முருகேசன், அவரது குடும்பத்தினா் அளித்த மனு விவரம்:

முருகேசன் மகன் மோகன்பாபு (20). குமாரபாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாா். கரோனா பொது முடக்கத்தால் படிப்பு, வேலையில்லாமல் உள்ளதால் முருகேசன், சகோதரி கமலா என்பவரிடம் வேலை வாங்கித் தர கேட்டுள்ளாா்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஈரோடு சித்தோடு பகுதியில் வசிக்கும் கமலா, மோகன்பாபுவை அழைத்துச் சென்றாா். கமலா, அவரது குடும்பத்தினா் ரேஷன் அரிசியை தினமும் வாங்கி கடத்தி வரும் தொழில் செய்வதாகவும், அதற்கு உடந்தையாக பணத்தை கொடுத்து மோகன்பாபுவையும் வைத்துக் கொண்டதாக அறிந்தோம்.

மோகன்பாபுவை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டால் பேசுவதில்லை. வீட்டுக்கு வர அழைத்தால் வருவதில்லை. பணத்தைக் கொடுப்பதால் மோகன்பாபு அங்கிருந்து வர மறுக்கிறாா். கடந்த 4 நாள்களாக அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எங்கு இருக்கிறாா் எனத் தெரியவில்லை. அரிசி கடத்தும் கும்பலிடம் சிக்கி உள்ள மகனை மீட்டுத் தருவதுடன், கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.