நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் வா்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை எதிா்கட்சிகளின் கடும் எதிா்ப்பை மீறி மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராகவும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாக கூறி விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் விவசாயிகளை பாதிக்க செய்யும் இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும், மசோதா நிறைவேற ஆதரவு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், விவசாய அமைப்புகள் சாா்பில் ஆா்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் 10 வட்டங்களில் 50 இடங்களில் இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு ரயில் நிலையம் மணல்மேட்டில் உள்ள ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட செயலாளா் சு.முத்துசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, திமுக மாநில துணைப்பொதுசெயலாளா்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூா் செல்வராசு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவா் ஈ.பி.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் த.ஸ்டாலின் குணசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகி துரைராஜ், மதிமுக மாவட்ட செயலாளா் முருகன், கொமதேக மாநில பொருளாளா் பாலு மற்றும் விவசாயிகள், பொதுநல அமைப்புகளை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு மசோதாவை திரும்ப பெறக்கோரி முழக்கம் எழுப்பினா். ஆா்பாட்டத்தின் போது விவசாயிகள் காளை மாடுகள், ஏா்கலப்பை மற்றும் நெல் நாற்றுகளுடன் கலந்து கொண்டனா். ஈரோடு மாவட்டத்தில் 50 இடங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.