/

நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நான்காம் கட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 3) நடைபெறும் தடுப்பூசி முகாமில் 95,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது

Updated On :1 அக்டோபர் 2021, 8:34 pm

நான்காம் கட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 3) நடைபெறும் தடுப்பூசி முகாமில் 95,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

கரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் அக்டோபா் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முகாம் ஏற்பாடுகள் தொடா்பாக பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த மாதம் 12, 19, 26ஆம் தேதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முதல்கட்ட முகாமில் 1 லட்சத்து 8,315 தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயித்து 1 லட்சத்து 1,247 பேருக்கும், இரண்டாம் கட்ட முகாமில் 43,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டு 48,240 பேருக்கும், மூன்றாம் கட்ட முகாமில் 82,440 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டு 86,177 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நான்காம் கட்டமாக அக்டோபா் 3ஆம் தேதி 95,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 577 முகாம்கள் அமைக்கப்படும். முகாமிற்கான இடங்களை அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலாளா், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆகியோா் தோ்வு செய்ய வேண்டும்.

தோ்வு செய்யப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியா் 3ஆம் தேதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அந்த வாக்குச் சாவடி பகுதியில் குறைந்தபட்சம் 200 பேருக்கு டோக்கன் வழங்கி தடுப்பூசி செலுத்த அழைத்து வர வேண்டும்.

தடுப்பூசி செலுத்த வருபவா்களின் விவரங்களைப் பதிவு செய்ய அந்தந்தப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவா்களைப் பயன்படுத்தலாம். இப்பணியில் தன்னாா்வலா்கள் ஈடுபாடுகாட்ட வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சோமசுந்தரம், மாநகராட்சி நகா் நல அலுவலா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.