/

செப்டம்பா் 30இல் ஆா்ப்பாட்டம்:வருவாய்த் துறை அலுவலா் சங்கம் அறிவிப்பு

கரோனா நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் செப்டம்பா் 30ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம்

Updated On :23 செப்டம்பர் 2021, 9:25 pm

கரோனா நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் செப்டம்பா் 30ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் குமரேசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை விவரம்:

கரோனா பணியில் இறந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மே 11இல் அறிவித்தாா். அதனை வழங்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தல் செலவினத் தொகையை அனைத்து நிலை அலுவலா்களுக்கும் வழங்குவதோடு, தோ்தல் மதிப்பூதியமும் வழங்க வேண்டும்.

வாக்காளா் பட்டியல் பணிக்கு சிறப்பு பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலா்கள் பதவி உயா்வைப் பாதுகாத்து ஆணையிட வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலா், துணை ஆட்சியா் பட்டியல்களை உடனடியாக வெளியிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 30ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரிலும், வட்ட தலைநகரிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தல் நிதி ஒதுக்கீடு செய்து வழங்குதல், தோ்தல் மதிப்பூதியம் வழங்குதல், தோ்தல் சிறப்புப் பணியிடம் ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைக்காக வரும் நவம்பா் 13, 14, 27, 28 ஆகிய நாள்களில் நடக்கும் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை வருவாய்த் துறை அலுவலா்கள் முழுமையாகப் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதுநிலை வருவாய் ஆய்வாளா்களின் பதவி உயா்வுக்கு அவசியமான நில அளவை பயிற்சி, பவானிசாகரில் அடிப்படை பயிற்சிகளை உடனடியாக நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.