/

மு.க. ஸ்டாலினை மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது! சோளிங்கரில் ராகுல் பேச்சு

சோளிங்கரில் நடைபெறும் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேச்சு...

News image

சோளிங்கரில் ராகுல் காந்தி - congress

Updated On :18 ஏப்ரல் 2026, 8:59 am

தமிழ்நாட்டில் நுழைய, அதிமுகவைப் பாஜக பயன்படுத்துவதாக சோளிங்கரில் ராகுல் காந்தி பேசினார்.

தமிழகத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக இன்று தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று காலை பொன்னேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, பிற்பகல் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெறும் பிரசாரத்தில் பங்கேற்றுள்ளார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் பற்றி கடுமையாக விமரிசித்துப் பேசிய ராகுல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா பற்றியும் பேசினார்.

"எவ்வளவு தைரியம் இருந்தால் அமித் ஷாவும் மோடியும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த முடியும்?

அதிமுக கட்சி என்ன நிலையில் இருக்கிறது? இனிமேல் அதிமுக என்ற கட்சியே இருக்காது. அதிமுகவை பாஜக முழுவதுமாக கைப்பற்றிவிட்டது.

பாஜகவின் கருவியாக மட்டுமே அதிமுக இருக்கிறது. தமிழ்நாட்டில் நுழைய, அதிமுகவைப் பயன்படுத்துகிறது பாஜக. தமிழ்நாடு என்கிற சிந்தனையையே தகர்க்கப் பார்க்கிறது மத்திய பாஜக அரசு.

தமிழ்நாட்டை தில்லியில் இருந்து முகமூடி அணிந்து யாரும் ஆள முடியாது. நாங்கள் தில்லியை ஆளும்போது அங்கிருந்து தமிழகத்தை ஆள நினைக்கவில்லை.

சகோதரர் மு.க. ஸ்டாலினுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். நாங்கள் திமுக மீது எந்த தாக்குதலையும் நடத்தவில்லை.

ஆனால் பாஜக, அதிமுக மீது தாக்குதல் நடத்துகிறது. அதிமுகவின் தலைமையை பாஜக கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதிமுக மூலம் தமிழ்நாட்டில் நுழைய பாஜக முயற்சி

பாஜக, ஆர்எஸ்எஸ் எப்போதும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும்.

கல்வி நிதி, மதுரை எய்ம்ஸ், மெட்ரோ திட்டம் ஆகியவற்றுற்கு மத்திய பாஜக அரசு நிதி தர மறுக்கிறது.

மோடியைக் கட்டுப்படுத்துகிறார் டிரம்ப். அதேபோல தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்த நினைக்கிறார் மோடி. அதற்காக அதிமுக மூலமாக முயற்சிக்கிறார். ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலினை மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. ஸ்டாலின் மீது மோடி எந்த அழுத்தத்தையும் தர முடியாது. ஸ்டாலின் சுதந்திரமாக இங்கு ஆட்சி செய்து வருகிறார். அதைத் தடுக்கவே அதிமுக மூலமாக ஒரு முதல்வரை களமிறக்க நினைக்கிறார் மோடி. மோடி என்ன திட்டம் போட்டாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது. திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்" என்று பேசினார்.

Summary

Delhi Must Not Rule Tamil Nadu: Rahul Gandhi Speaks in Sholingur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.