ஈரோட்டில் ஆட்சியர் முன் தீக்குளிக்க தம்பதி முயற்சி, பரபரப்பு
வீட்டை அபகரிக்க முயற்சி செய்பவரிடம் நடவடிக்கையெடுக்கக்கோரி ஆட்சியர் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


ஈரோடு: வீட்டை அபகரிக்க முயற்சி செய்பவரிடம் நடவடிக்கையெடுக்கக்கோரி ஆட்சியர் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (46). இவரது மனைவி சசிகலா(40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி கட்டடத் தொழிலாளி. இந்நிலையில் ராமசாமி மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு தாண்டாம்பாளையத்தில் 8 சென்ட் நிலம் வாங்கி உள்ளனர்.
இந்த நிலம் அருகே அதே ஊரைச் சேர்ந்த ஒருவரும் விவசாயத் தோட்டம் அமைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ராமசாமி தான் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட தொடங்கினார். 2017-ஆம் ஆண்டு வீடு கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் இது என்னுடைய நிலம். உங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் வீட்டை இடித்து விடுவேன் என்று கூறி தொந்தரவு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி, சசிகலா தம்பதியினர் இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

ஆனால் எந்த ஒரு நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்காததால் விரக்தியில் இருந்த ராமசாமி சசிகலா தம்பதியினர் புதன்கிழமை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு வந்திருந்தனர்.
அப்போது ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி, கோட்டாட்சியர் பிரேமலதா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியீட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ராமசாமி, சிவகாமி தம்பதியினர் தாங்கள் வைத்திருந்த பாட்டிலை எடுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனை பார்த்து ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரும் அவருடன் வந்திருந்த பாதுகாவலர்களும் இருவரிடம் இருந்து புட்டியை பறித்தனர்.

அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. உடனடியாக அவர்களிடம் நடந்த விவரத்தை ஆட்சியர் கேட்டறிந்தார். எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை என்னிடம் கூற வேண்டும். இதுபோல் தீக்குளிக்க முயற்சி செய்வது தவறாகும் என்று அவர்களிடம் அறிவுரை கூறினார். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த தம்பதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாங்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீட்டைக் கட்டி உள்ளோம். அந்த வீட்டையும் நிலத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்.
இதனால் நாங்கள் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து தீக்குளிக்க வந்தோம். சம்பந்தப்பட்ட மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...