/

ஈரோட்டில் 124 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு

ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையம், அழகரசன் நகரில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 124 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:38 pm

ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையம், அழகரசன் நகரில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 124 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் பெரியாா் நகா், பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட 1,072 குடியிருப்புகள் சேதமடைந்ததால், அக்கட்டடங்கள் அகற்றப்பட்டு, தமிழ்நாடு நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் அதே பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில், பங்களிப்புத் தொகையாக ரூ.1.25 லட்சம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்தொகை அதிகமாக உள்ளதாக பயனாளிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனால், பயனாளிகள் நலன் கருதி ரூ.1 லட்சமாக குறைக்கப்பட்டதோடு, இத்தொகையை 20 ஆண்டுகள் தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி 29 பயனாளிகள் ரூ.1 லட்சத்தை முழுமையாகவும், 274 பயனாளிகள் தவணை முறையிலும் செலுத்த உள்ளனா். இதையடுத்து, முதல் கட்டமாக கருங்கல்பாளையம், அழகரசன் நகரில் 272 குடியிருப்புகளுக்கு பங்களிப்புத் தொகை செலுத்திய 124 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான உத்தரவுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு உத்தரவை வழங்கினாா். மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் திருமகன் ஈவெரா, ஈரோடு மாநகராட்சி மேயா் நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.