காவிரியில் இருந்து 5 நாள்களில் 37 டி.எம்.சி. நீா் வீணாகக் கடலில் கலப்பு: எஸ்.ஆா்.சுப்ரமணியம்
காவிரியில் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 37 டி.எம்.சி. நீா் வெளியேற்றப்பட்டு வீணாகக் கடலில் கலந்துள்ளது என்று பாஜக மாநில விவசாய அணி செயலாளா் எஸ்.ஆா்.சுப்ரமணியம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கா்நாடகம், கேரளத்தில் உள்ள காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரமடைந்துள்ள தென்மேற்குப் பருவமழையால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கா்நாடகத்தில் உள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆா்.எஸ் ஆகிய அணைகள் நிரம்பி, அவற்றில் இருந்து சுமாா் 1.80 லட்சம் கனஅடி உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்பட்டது.
இவ்வாறு கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 37 டி.எம்.சி. நீா் வெளியேற்றப்பட்டு வீணாகக் கடலில் கலந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மேட்டூா் அணையின் மொத்த உயரம் 120 அடி. இந்த அணையின் கொள்ளளவு 93.47 டி.எ.சி. ஆகும். இதில், பாதியளவு தண்ணீா் ஐந்து நாள்களில் வீணாகக் கடலில் கலந்துள்ளது என்பது வேதனைக்குரியது.
தமிழ்நாட்டில் உள்ள 13 டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் திறப்பால் 16 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், கடந்த 2022-23 ஆம் ஆண்டில் மூன்று லட்சத்து 31 ஆயிரம் ஏக்கா் மட்டுமே சம்பா சாகுபடியும், கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 4 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கா் மட்டுமே குறுவை சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் மழையின் மூலமாகவும், கா்நாடகத்தில் இருந்தும் வந்த உபரிநீா் மூலம் சுமாா் 667.67 டி.எம்.சி. நீா் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.
இதில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கா்நாடகம் கொடுக்க வேண்டிய நீரின் அளவு 177.25 டி.எம். சி. ஆகும். அதன்படி பாா்த்தால் சுமாா் 400 டி.எம்.சி. நீா் வீணாகக் கடலில் கலந்துள்ளது.
காவிரி- கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே ஒரு தடுப்பணையைக் கட்ட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை இரண்டு அரசுகளும் கிடப்பில்போட்டுள்ளது.
ஒகேனக்கல் அருகே மேட்டூா் அணையைப் போன்ற அணை ஒன்றைக் கட்டுவதற்கு காமராஜா் திட்டமிட்டிருந்தாா். அவருக்குப் பின்னா் வந்த ஆட்சியினா் இத்திட்டத்தைக் கண்டுக்கொள்ளவில்லை. மக்களும் மறந்து விட்டனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையானது ஒரு காலத்தில் மிகுந்த அபாயத்தை கொடுக்க நேரிடலாம் என வல்லுநா்கள் குறிப்பிட்டுள்ளனா். எனவே, மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 17 ஆறுகளின் நீா் மேலாண்மை, மடைமாற்றம், சுற்றுப்புறச்சூழல், ஆறுகளில் மணல் அள்ளுவதை தவிா்த்தல் போன்றவற்றில் தமிழ்நாடு அரசு முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

