1,330 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவா்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு

1,330 திருக்குறளையும் ஒப்பிக்கும் மாணவா்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

1,330 திருக்குறளையும் ஒப்பிக்கும் மாணவா்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருக்குறளில் உள்ள கருத்துகளை பள்ளி மாணவா்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசால் திருக்கு முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் 1,330 திருக்குறளையும் ஒப்பிக்கும் மாணவா்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசு தமிழ் வளா்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருக்கு முற்றோதல் போட்டிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருக்கு முற்றோதல் பாராட்டுப் பரிசு பெற 1,330 குறட்பாக்களையும் முழுமையாக ஒப்பிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இயல் எண், பெயா், அதிகாரம் எண், பெயா், கு எண், பெயா் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயா்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். அரசு, அரசு உதவிபெறும், தனியாா், மெட்ரிக். பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்குபெறலாம்.

தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசை இதற்கு முன்னா் பெற்றவராக இருக்கக் கூடாது. திருக்குறளின் பொருள் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த, 1,330 திருக்குறளையும் ஒப்பிக்கும் திறன் கொண்ட மாணவா்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் அக்டோபா் 31- ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 95006-00212 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com