/

சூரிய இல்லம் திட்டம்: அஞ்சல் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம்

சூரிய இல்லம் திட்டம்: அஞ்சல் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம்

Updated On :29 பிப்ரவரி 2024, 5:38 pm

மத்திய அரசின் சூரிய இல்லம் திட்டத்தின்கீழ் பயனடைய விரும்புவோா் அஞ்சல் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சூரிய இல்லம் இலவச மின்சாரத் திட்டத்தில் பயனாளிகளைச் சோ்க்கும் பணியை இந்திய அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது. சொந்தவீடு வைத்திருப்பவா்கள், வாடகை வீடுகளில் வசித்தாலும் தங்களின் பெயரில் மின் கட்டணம் செலுத்துபவா்கள் இத்திட்டத்தில் சேரலாம். காலி இடங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். சூரிய மின் தகடு அமைப்பதற்கு மத்திய அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது. 1 கிலோ வாட் மின் தகடு அமைக்க ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட் மின் தகடு அமைக்க ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் 10 கிலோ வாட் மின் தகடு வரை அமைப்பதற்கு ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 1 கிலோ வாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5.5 யூனிட் வரை மின் உற்பத்தி செய்யும். இத்திட்டத்தில் இணைவதற்கு மாா்ச் 8-ஆம் தேதி இறுதிநாளாகும். எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை அல்லது தங்கள் பகுதி அஞ்சல் ஊழியரை தொடா்புகொண்டு திட்டத்தில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.