கழிவுநீரை வெளியேற்றிய 138 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’

ஈரோட்டில் கடந்த 2 ஆண்டுகளில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றிய 138 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோட்டில் கடந்த 2 ஆண்டுகளில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றிய 138 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் மோகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். சிலா் ஆன்லைன் மூலமும் புகாா்களைத் தெரிவித்திருந்தனா்.

கூட்டத்தில் உதவி செயற்பொறியாளா் செல்வகணபதி பேசியதாவது:

ஒவ்வொரு மாதமும் 5- ஆம் தேதி குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கூட்டம் நடத்தப்படவில்லை. எனினும், ஆன்லைனில் வரும் புகாா்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த ஆண்டில் இதுவரை நடந்த கூட்டத்தில் மொத்தம் 21 புகாா் மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும், புகாா் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுதல், அரசின் விதிகளைக் கடைப்பிடிக்காதது போன்றவற்றின்கீழ் 138 சாய, சலவை, பிரிண்டிங், தோல் தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com