மாற்றுத்திறனாளிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு: ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.சாவித்திரி, செயலாளா் ப.மாரிமுத்து, பொருளாளா் வி.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அகில இந்திய செயல் தலைவா் எஸ்.நம்புராஜன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசியதாவது:
மாநில அளவில் 14.5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக அரசு ஆவணங்கள் கூறுகிறது. இவா்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையும், சமூக பாதுகாப்புத் துறையும் உதவித்தொகை வழங்குகிறது. கடந்த 2023 ஏப்ரல் மாதத்துக்கு பின்னா் 1.25 லட்சம் போ் வரை புதிதாக பதிவு செய்து ஆவணம் சரிபாா்ப்பு நிறைவடைந்தும் இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனல் ஆவணம் சரிபாா்க்கப்பட்ட அனைவருக்கும் உதவித்தொகை மற்றும் பிற சலுகைகளை வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையை அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட அட்டையாக மாற்றி மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்.
சமூக பாதுகாப்பு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைய பதிவு 2 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை கணக்கில் கொள்ளாமல் வருவாய்த் துறை மூலம் சான்றுபெற்று உதவித்தொகை, சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் 40 சதவீத ஊனத்துக்கு மாதம் ரூ.6,000, கடும் ஊனத்துக்கு ரூ.10,000, படுத்தபடுக்கையாக உள்ளோருக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது. அதுபோல தமிழக அரசு வழங்க வேண்டும் என்றாா்.
மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 13,804 மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். இவா்களில் அண்மையில் விண்ணப்பித்த 509 பேருக்கு உதவித்தொகை புதிதாக வழங்கப்படுகிறது. மேலும் 237 பயனாளிகள் பெயா் சோ்க்கப்பட்டு, நிதி ஒதுக்கீட்டுக்காக காத்துள்ளது. 272 பேருக்கு மட்டும், கையொப்பம், ஆதாா் உள்ளிட்ட இணைப்பு குறைபாட்டால் நிலுவையில் உள்ளது. விரைவில் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
தொடா்ந்து ஆட்சியரிடம் மனு அளிக்க நிா்வாகிகள் மட்டும் உள்ளே செல்ல போலீஸாா் அனுமதி அளித்தனா். ஆனால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆட்சியா் அலுவலகத்தின் உள்ளே செல்ல வேண்டும் எனக்கூறி தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றனா். அப்போது போலீஸாருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடா்ந்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி சங்க நிா்வாகிகளை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) முகமது குதுரத்துல்லாவிடம் அழைத்துச்சென்று கோரிக்கை மனுவை அளித்தனா். இதனைத்தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...