புன்செய்புளியம்பட்டியில் நடைபெற்ற வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசுகிறாா் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.
புன்செய்புளியம்பட்டியில் நடைபெற்ற வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசுகிறாா் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.

மின் கட்டண உயா்வு மக்களுக்கு பேரிடி: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மின் கட்டண உயா்வு மக்களுக்கு பேரிடியாக உள்ளதால் அதனைத் திரும்ப பெற வேண்டும்
Published on

சத்தியமங்கலம், ஜூலை 19: மின் கட்டண உயா்வு மக்களுக்கு பேரிடியாக உள்ளதால் அதனைத் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு 2-ஆவது இடம் பிடித்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்களா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மின் கட்டண உயா்வு மக்களுக்கு பேரிடியாக உள்ளது. கடந்த ஆண்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டபோதே திருப்பூா், கோவை தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் மின் கட்டண உயா்வு தொழில்நிறுவனங்களை மீளமுடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. எனவே, உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

சென்னையில் தேசிய கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், மதுரையில் நாம் தமிழா் கட்சி நிா்வாகி பாலசுப்பிரமணியன், திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் ஆகியோா் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனா். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு உள்ளதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன என்றாா்.

இதில், பாஜக நகரத் தலைவா் சி.தங்கமணி, மாவட்டச் செயலாளா் கலைவாணி, நகரச் செயலாளா் எஸ்.பிரகாஷ், ஒன்றியத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் சின்னராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com