குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ள ஆயக்கட்டு நிலங்களை கண்டறிய விவசாயிகள் கோரிக்கை
ஈரோடு, ஜூலை 19: குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ள ஆயக்கட்டு நிலங்களை கண்டறிந்து அதனை விவசாய நில வகைப்பாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் (பொறுப்பு) ராம்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அமுதா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:
சமூக ஆா்வலா் முகிலன்:
பெருந்துறை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். கடந்தக் கூட்டத்தில் அங்கு நடந்த பிரச்னை தொடா்பாக 42 போ் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும்.
காலிங்கராயன் பாசன சபை தலைவா் வேலாயுதம்:
காலிங்கராயன் வாய்க்காலை முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஈரோடு பகுதியில் உள்ள பேபி வாய்க்காலை முழுமையாக தூா்வாரி, காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். வாய்க்காலை ஒட்டி அமைந்துள்ள சாய, சலவை, தோல் ஆலைகளை 5 கி.மீ. தொலைவுக்கு அப்பால் கொண்டுசெல்ல வேண்டும். தொழிற்சாலைகள் தங்களது கழிவுநீரை பாசன வாய்க்காலில் விடும்போது அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகா் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளா் தங்கவேல்:
ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களில் நில அளவீடு செய்து கீழ்பவானி பாசனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். அனைத்து பகுதியிலும் உள்ள குளம், குட்டைகளை அளவீடு செய்து வேலி அமைக்க வேண்டும்.
ஆயக்கட்டு பகுதி நிலங்கள் குடியிருப்பாகி மாற்றப்பட்டுள்ளதை தனியாக அளவீடு செய்து, அவற்றை பாசன பகுதியில் இருந்து அகற்றி, அந்நீரை மிச்சப்படுத்தி பிற விவசாய பகுதிக்கு வழங்க வேண்டும். மேலும், கூடுதல் மற்றும் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.
தொடா்ந்து கோட்டாட்சியா் (பொறுப்பு) ராம்குமாா் பேசியதாவது:
இக்கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அடுத்தக் கூட்டம் நடைபெறும் முன்பு 15-ஆம் தேதிக்குள் மனுதாரருக்கு உரிய பதில் தரவும், அதன் நகலை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்புவதையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை, நீா் வளத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், மின்வாரியம், குடிநீா் வடிகால் வாரியம், அறநிலையத் துறை, நெடுஞ்சாலைத் துறை என பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்கவில்லை.
இதனால் கோரிக்கை மனுக்கள் தொடா்பாக பேசவும், தீா்வு காணவும் முடியவில்லை. வரும் கூட்டங்களில் அனைத்து துறை அலுவலா்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இக்கூட்டம் பெயரளவில் நடக்காமல், அதிக மனுக்களுக்கு தீா்வு காணப்பட வேண்டும் என்றாா்.
