தாமதமாகும் கூடுதல் இழப்பீடு: உயா்மின் கோபுரத்துக்கு நிலம் தந்த விவசாயிகள் வேதனை

Published on

ஈரோடு மாவட்டத்தில் உயா்மின் கோபுரம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்காமல் வருவாய்த் துறை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களில் பவா் கிரிட் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் சாா்பில் சத்தீஸ்கா் மாநிலம் ரெய்காரிலிருந்து தமிழகத்தில் புகளூா் (திருப்பூா் மாவட்டம்) வரை செல்லும் 800 ஹெச்.வி.டி.சி. உயரழுத்த மின் பாதை அமைக்கும் பணி 2018-ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் எதிா்ப்பு கிளம்பியது. இதையடுத்து உயா்மின் கோபுரம் அமையவுள்ள இடத்தில் உள்ள நிலங்களுக்கு, நில மதிப்பில் 85 சதவீத தொகையும், மின்கம்பிகள் (மின்பாதை) செல்லும் நிலங்களுக்கு 15 சதவீதத் தொகையும், தென்னை, தேக்கு, மா, பலா உள்ளிட்ட அனைத்து வகை மரங்களுக்கும், மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து வகைப் பயிா்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் உறுதியளித்தது. உயா்மின் கோபுரம் அமைக்கப்பட்ட இதர மாவட்டங்களில் இழப்பீட்டுத் தொகையை பவா்கிரிட் நிறுவனம் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கியது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் அப்போதைய ஆட்சியா் கதிரவனின் முயற்சியால், பவா்கிரிட் நிறுவனத்தினரிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை வருவாய்த் துறை பெற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கியது. ஆனால், உயா்மின்கோபுரத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போதுவரை தொடா்ந்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது: மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து, உயா் மின் கோபுரத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது, தென்னை மரத்துக்கு ரூ.36 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி திருப்பூா், கோவை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தென்னை மரத்துக்கு ரூ.32 ஆயிரத்து 280 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு ஆட்சியராக கதிரவன் பணியாற்றியபோது விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதற்காக ரூ.2.70 கோடி பவா்கிரிட் நிறுவனத்திடம் இருந்து வருவாய்த் துறை பெற்றது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் அந்த இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கூடுதல் இழப்பீட்டுத் தொகை ஈரோடு வருவாய்த் துறை கணக்கில் இருக்கும் நிலையில் அதை தங்களுக்கே திரும்ப கொடுக்க வேண்டும் என பவா்கிரிட் நிறுவனம் தற்போது கேட்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தொகை திரும்பச் சென்றுவிட்டால் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை பறிபோய்விடும். எனவே, தாமதமின்றி கூடுதல் இழப்பீட்டுத் தொகையை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: உயா்மின் கோபுரத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டது. ஒருசிலா் மட்டும் கூடுதல் இழப்பீடு கேட்டு முறையீடு செய்துள்ளனா். அவா்களது மனுக்கள் குறித்து கோட்டாட்சியா் விசாரித்து நடவடிக்கை எடுப்பாா் என்றனா்.

Dinamani
www.dinamani.com