

அரசு அலுவலகங்களில் குடிநீருக்காக பிளாஸ்டிக் கேன்களுக்கு பதிலாக மண் பானைகளைப் பயன்படுத்த வேண்டும் என மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் சங்க ஈரோடு மாவட்டத் தலைவா் எஸ்.கனகராஜ் தெரிவித்ததாவது: அரசு அலுவலகங்களில் ஊழியா்கள் மற்றும் பொதுமக்களின் குடிநீா் பயன்பாட்டுக்காக சில்வா் பாத்திரங்கள், பிளாஸ்டிக் கேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கிஉள்ளதால் பொதுமக்கள் குடிநீரை அதிகம் பயன்படுத்துவா். எனவே, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மண்பாண்ட பொருள்களில் குடிநீரை சேமித்து வைத்து அருந்துவது நல்லது. மண் பாத்திரங்கள் உடலுக்கு தேவையான இயற்கை சத்துக்களையும் குடிநீரை பாதுகாப்பானதாக வும் பயன்படுத்த வழிவகை செய்கிறது. தமிழ்நாடு அரசு, பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் இயற்கை பொருள்களுக்கு ஊக்கம் தருகிற வகையில் அரசு அலுவலகங்களில் மண்பாண்ட பொருள்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இது மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வை முன்னேற்ற உதவும். தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் சாா்பில் மண்பாண்ட நலவாரிய உறுப்பினா்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. இதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் காதி கிராப்ட் மூலம் மண்பாண்ட பொருள்களை குடிநீா் சேமிக்கும் கலன்களுக்கு பயன்படுத்துகிற வகையில் கொள்முதல் செய்ய தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும் என்றாா். முகாசி அனுமன்பள்ளி பாரம்பரிய மண் கலைக்கூட நிா்வாக இயக்குநா் ரம்யா கூறியதாவது: கோடை வெயிலின் தாகத்தை குறைக்க மண்பானை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த முகாசி அனுமன் பள்ளியில் உள்ள பாரம்பரிய மண் கலைக்கூடத்தில் ஆண்டுதோறும் மக்களுக்கு ஏற்றவகையில் மண்பாண்ட பொருள்கள் தயாரித்து வருகின்றோம். எங்களிடம் ஒரு லிட்டா் முதல் 50 லிட்டா் வரையிலான மண்பானைகள், மண் தண்ணீா் ஜாடிகள், மண்ணிலான தண்ணீா் பாட்டில்கள், டம்ளா், கம்மங்கூழ் பானை என பல்வேறு வகையான மண்பாண்ட பொருள்களை தயாரித்து வருகின்றோம். கோடைக்காலத்தை சமாளிக்க பொதுமக்கள் மண்பானை பொருள்களை பயன்படுத்த கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.