விபத்து வழக்குப் பதிவு செய்யாமல் போலீஸாா் அலைக்கழிப்பு

சாலை விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யாமல் போலீஸாா் அலைக்கழிப்பதாக கூறி கல்லூரி மாணவா் புகாா் அளித்தாா்.
Published on

சாலை விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யாமல் போலீஸாா் அலைக்கழிப்பதாக கூறி கல்லூரி மாணவா் புகாா் அளித்தாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கிடையூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பரத் (18). இவா் திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். பரத் வியாழக்கிழமை அவரது தந்தை செல்வராஜுடன், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகரிடம் அளித்த மனு விவரம்:

நான் திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்நிலையில், காஞ்சிக்கோவிலில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக எனது உறவினா் கோபிநாத் (33) என்பவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து கடந்த 10-ஆம் தேதி சென்றேன். கோபிநாத் இருசகத்கர வாகனத்தை ஓட்டினாா்.

குறுச்சான்வலசு-மூலக்கடை சாலையில் சென்றபோது கோபிநாத் வேகமாக சென்ால் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தோம். இதில் எனக்கு இடது காலில் இரண்டு எலும்புகள் உடைந்தன. கோபிநாத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் என்னை மீட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு எனக்கு அறுவை சிகிச்சை செய்தனா். உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்தபோது காஞ்சிக்கோவில் போலீஸாா் என்னிடம் வாக்குமூலம் பெற்றனா்.

மேலும் விபத்து குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்திருந்தேன். ஆனால், போலீஸாா் 2 வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்றுச்சென்றனா். ஆனால், இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீஸாரிடம் கேட்டால் முறையாக பதில் கூறாமலும், வழக்குப் பதிவு செய்யாமலும் அலைக்கழிக்கின்றனா். எனவே விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.