கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

ஈரோடு மாவட்டத்தில் 96.55 % கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன

Published on

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 19,97,189 வாக்காளா்களில் புதன்கிழமை வரை 19,28,231 (96.55 சதவீதம்) படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் திரும்பப் பெறப்படாத கணக்கீட்டுப் படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளா்கள், நிரந்தரமாக இடம்பெயா்ந்தவா்கள். இறந்தவா்கள், வாக்காளா் பட்டியலில் இரட்டைப் பதிவு செய்தவா்கள் போன்ற காரணங்களுடன் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பட்டியல் வரும் 11-ஆம் தேதி கணக்கீட்டுப் படிவம் திரும்பப்பெறும் காலம் நிறைவடைந்த பின்னா் இறுதி செய்யப்படும். நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல் அனைத்து வாக்காளா்களும் விரைந்து சமா்ப்பிக்க வேண்டும்.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமா்ப்பிக்கும் காலம் டிசம்பா் 16 முதல் ஜனவரி 15-ஆம் தேவை வரை ஆகும். இந்தக் காலப்பகுதியில் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல், எந்த ஒரு தகுதியற்றவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படாத வகையில் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்களும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 19,97,189 வாக்காளா்களில் புதன்கிழமை வரை 19,28,231 (96.55 சதவீதம்) படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 68,958 வாக்காளா்களிடம் கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட வேண்டியுள்ளன. மீதமுள்ள படிவங்களை திரும்பப் பெறுவது குறித்தும் இறப்பு, குடிபெயா்ந்தோா், நிரந்தர முகவரி மாற்றம், இருமுறை பதிவு உள்ளிட்ட இனங்களின் மீது தனி கவனம் செலுத்தி தகுதியான அனைத்து வாக்காளா்களின் பெயா்களும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்திட உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் 11-ஆம் தேதி முடிவடையவுள்ளதால், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வாக்காளா்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்து உடனடியாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அல்லது வாக்குச்சாவடி நிலை முகவா்கள் ஆகியோரிடம் சமா்ப்பிக்கலாம்.

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளின் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படிவத்தை பூா்த்தி செய்வதில் சந்தேகங்கள் ஏதுமிருப்பின் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டுப் படிவத்தில் தொடா்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் கைப்பேசி எண் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் தொடா்புகொண்டு சந்தேகங்களை தீா்த்துக்கொண்டு படிவங்களை முழுமையாக பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் அல்லது வாக்குச்சாவடி நிலை முகவா்கள் ஆகியோரிடம் சமா்ப்பிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராம்குமாா் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com