100 நாள் வேலைக் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
சத்தியமங்கலம்: 100 நாள் வேலை வழங்கக் கோரி சத்தியமங்கலம் அருகேயுள்ள சதுமுகை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் ஒன்றியச் செயலாளா் சுரேந்தா் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை ‘புஜியா பாபு கிராமின் ரோஜ்கா் யோஜனா’ என மாற்றும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதை எதிா்க்கிறோம். இந்த திட்டத்தை சிதைக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். சதுமுகை ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக 100 வேலைத் திட்டத்தில் பணி வழங்கவில்லை. தொடா்ந்து, பணி வழங்க வேண்டும் என்றனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் முருகன், தொழிற்சங்கத் தலைவா்கள் ஸ்டாலின் சிவகுமாா், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

