திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு
சத்தியமங்கலம்: திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்ததால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது. இதன் வழியே தமிழகம்-கா்நாடக மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆசனூரில் இருந்து மக்காச்சோள தட்டு பாரத்தை ஏற்றிக்கொண்டு கோவைக்கு லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப் பாதையில் 26-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
இதில், ஓட்டுநா் ராஜா காயங்களின்றி உயிா்த் தப்பினாா். இந்த விபத்தால் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் போலீஸாா் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

