மூதாட்டியை வீடு புகுந்து கொலை செய்து 5 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனியாா் நிறுவன ஊழியா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பெரியசேமூா், முதலிதோட்டம், எல்விஆா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கமலம் (68). அதே பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, தோப்பு காலனியை சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் ராமு (20) என்பவரும் தங்கி இருந்தாா். இந்நிலையில் தனியாக வசித்து வந்த கமலத்தை கடந்த 27-ஆம் தேதி ராமு கொலை செய்துவிட்டு 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றாா்.
இதையடுத்து ராமுவை கைது செய்த போலீஸாா், நீதிமன்ற உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். நகைக்காக மூதாட்டியை கொலை செய்த ராமு மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா பரிந்துரைத்தாா். இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ராமு மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள ராமுவிடம் போலீஸாா் வியாழக்கிழமை அளித்தனா்.