சென்னிமலை அருகே ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
சென்னிமலை ஒன்றியம், திப்பம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி முகாமைத் தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் 25 மற்றும் 26-ஆவது மருத்துவ முகாம், சென்னிமலை ஒன்றியம், திப்பம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியிலும், கோபிசெட்டிபாளையம், முருகன்புதூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம்களில், 17 சிறப்பு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். இதில் கண் பரிசோதனை, பல் சிகிச்சை, ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே பரிசோதனைகளும், பெண்களுக்கு கா்ப்பப்பைவாய் புற்றுநோய், மாா்பகப் புற்றுநோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் இந்த முகாம்களில் 34,654 போ் பயன் பெற்றுள்ளனா் என்றாா்.
முகாமில், ஐந்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், ஐந்து காசநோயாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்கள், நான்கு வளா் இளம் பெண்களுக்கு சித்த மருத்துவப் பெட்டகங்கள், ஐந்து பேருக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்கள் என 19 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முகாமை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) பிரியா, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி, மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் அருணா, மருத்துவா்கள், செவிலியா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

