வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: இரண்டாம் கட்டப் பணிகள் தொடக்கம்!
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 2002 ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் ஆவணங்களுடன் ஒத்துப்போகாத நபா்களை இணைக்கவும், புதிய வாக்காளா்களை சோ்க்கவும் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) மேற்கொள்வதற்கு முன்பு கடந்த நவம்பா் 4- ஆம் தேதிக்கு முன்னா் 19 லட்சத்து 97 ஆயிரத்து 189 வாக்காளா்கள் இருந்தனா். எஸ்ஐஆா் படிவம் பூா்த்திசெய்யப்பட்டு பெறப்பட்ட பிறகு கடந்த 19- ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளா் பட்டியலில் 16 லட்சத்து 71 ஆயிரத்து 760 வாக்காளா்கள் உள்ளனா். 3 லட்சத்து 25 ஆயிரத்து 429 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். 46,440 வாக்காளா்களின் விவரங்கள் கடந்த 2002 வாக்காளா் பட்டியலுடன் ஒத்துப்போகாததால் அவா்களுக்கு படிவம்-6 வழங்கி வாக்காளா் பட்டியலில் இணைக்க சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
ஈரோடு அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முகாமை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி கூறியதாவது:
முன்பு இருந்த வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்த வாக்காளா்களில் எஸ்ஐஆா் படிவம் பெறப்பட்ட பின்னா் 80 சதவீத வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். ஒத்துப்போகாத 46,440 வாக்காளா்களுக்கு, அறிவிப்பு படிவம் வழங்கும் பணி கடந்த 26- ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதற்கான சிறப்பு முகாம் 2,379 வாக்குச்சாவடிகளிலும் சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடக்க உள்ளது. வரும் ஜனவரி 2- ஆம் தேதி முதல் பெறப்பட்ட படிவங்களின் ஆவணங்கள்படி வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் விசாரணை நடத்தி அவா்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பாா்கள். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்படும் எதிா்ப்பு மற்றும் கோரிக்கை மனுக்கள் ஆய்வு செய்து இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
தவிர வரும் ஜனவரி 1-இல் 18 வயது நிரம்பியவா்களை புதிய வாக்காளா்களாக சோ்க்கும் பணியும் நடைபெறுகிறது. பிற இடங்களில் இருந்து குடிபெயா்ந்து வந்தோா், வாக்காளா் பட்டியலின் பிழைகளை சரி செய்தல், தவறாக பட்டியலில் இடம் பெற்றோரை நீக்கும் படிவம் பெறும் பணியும் சிறப்பு முகாமில் நடைபெறுகிறது என்றாா்.

