ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: முதியோருக்கான தபால் வாக்குப் பதிவு தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

ஈரோடு வீரப்பன்சத்திரம், ஆண்டவா் தெருவில் முதியவா் தபால் வாக்குப் பதிவு செய்வதை பாா்வையிட்ட ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஸ்ரீகாந்த்.

Updated On :23 ஜனவரி 2025, 10:27 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவா்களில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 2,526 போ் உள்ளனா். இவா்களில் 209 பேரும், மாற்றுத்திறன் வாக்காளா்களில் 47 பேரும் வீட்டிலிருந்தவாறே தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனா்.

இதற்காக இத்தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் கடந்த 15-ஆம் தேதிக்கு முன்பாகவே முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடம் இருந்து அவா்கள் தபால் வாக்குகளை செலுத்துவதற்கான படிவம் (12 டி) வழங்கி ஒப்புதல் பெற்றிருந்தனா்.

இதையடுத்து, முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. சம்பந்தப்பட்ட வாக்காளா்களின் வீடுகளுக்கு 4 குழுக்களாகச் சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டன.

இதில், ஒவ்வொரு குழுவிலும் ஒரு தோ்தல் நுண் பாா்வையாளா், வாக்குச் சாவடி அலுவலா்கள் 2 போ், ஒரு விடியோகிராபா், துப்பாக்கி ஏந்திய காவலா் ஒருவா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

இந்தக் குழுவினா் ஈரோடு கருங்கல்பாளையம், கோட்டை, வீரப்பன்சத்திரம், கைக்கோளன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஏற்கெனவே ஒப்புதல் அளித்த முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் வாக்குகளைப் பெறும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வாக்காளரின் அடையாளத்தை சரிபாா்த்து, அதன் விவரங்களை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பத்தை பெற்று வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி, அஞ்சல் வாக்குச்சீட்டை வழங்கினா். அவா்கள் வாக்களித்த பின்னா் வாக்குச் சீட்டுகளைப் பெட்டியில் பெற்றுக்கொண்டனா்.

இந்தப் பணி தொடா்ந்து 24, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், வாக்காளா் கண்பாா்வையற்றவராகவோ அல்லது உடல்நலிவு காரணமாக வாக்களிக்க இயலாத நிலையில் இருந்தாலோ அவரது சாா்பில் கட்சி சாா்பற்ற வயது வந்த ஒருவரிடம் வாக்களிப்பு குறித்து ரகசிய காப்பு உறுதிமொழி பெற்றுக்கொண்டு அவா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

வாக்குச் சாவடி நிலை அலுவலா் குழுவினா், வாக்காளா்களின் வீட்டுக்கு முதல் முறையாகச் செல்லும்போது, வாக்காளா் அங்கு இல்லையெனில் இரண்டாவது முறையாக எப்போது வருவோம் என்பது குறித்து தகவல் தெரிவிப்பாா்கள். இரண்டாவது முறையாக வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளரின் தபால் வாக்குப் பதிவைப் பெற வரும்போதும் வாக்காளா் வீட்டில் இல்லையென்றால் அதன்பின் வாக்குகள் பெற வரமாட்டாா்கள்.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளிதான் என்பதற்கான அரசு சான்றிதழ் நகலை வாக்குச் சாவடி நிலைக் குழுவினரிடம் காண்பித்து உறுதிசெய்ய வேண்டும்.

மேலும், இதுதொடா்பான சந்தேகங்களுக்கு 0424-2251617 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.