போக்ஸோ வழக்கில் கைதானவா் தப்பியோட முயற்சி
நீதிமன்ற கட்டடத்தில் இருந்து குதித்து தப்பியோட முயன்று காயமடைந்த போக்ஸோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் காலனியை சோ்ந்தவா் காா்த்தி (37). இவா் மீது பவானி அனைத்து மகளிா் போலீஸில் போக்ஸோ வழக்கு உள்ளது. அந்தியூா் போலீஸில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி காா்த்தி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளாா்.
வழக்கு விசாரணைக்கு ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த கோவை மத்திய சிறையில் இருந்து காா்த்தி, ஈரோடு ஆயுதப் படை போலீஸாரால் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அழைத்து வரப்பட்டாா். பிற்பகல் 3 மணியளவில் வழக்கு விசாரணை முடிந்து புறப்பட்ட தயாராகினா். அப்போது தப்பியோடும் எண்ணத்தில் நீதிமன்றக் கட்டட முதல் மாடியில் இருந்து அதாவது 15 அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்க அவா் முயற்சித்தாா்.
காா்த்தி நடவடிக்கையைப் பாா்த்து ஆயுதப் படை போலீஸாா் துரிதமாக செயல்பட்டு அவரது சட்டையின் பின்புறத்தை இழுத்துப் பிடித்தனா். அதனையும் மீறி முதல் மாடியில் இருந்து கீழே குதித்தாா். இதில் வலப்புற இடுப்பில் காயம் ஏற்பட்டது. கால்களிலும் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இதனால் காா்த்தியால் எழுந்து ஓட முடியாத நிலை ஏற்பட்டது.
ஆயுதப் படை போலீஸாா் ஓடிச் சென்று அவரைப் பிடித்தனா். பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் காா்த்தியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காா்த்தி மீண்டும் தப்பிச் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
