காா்த்தி சிதம்பரம் மீதான விசா முறைகேடு வழக்கு: விசாரணையில் இருந்து மற்றொரு நீதிபதி விலகல்

காா்த்தி சிதம்பரம் மீதான விசா முறைகேடு வழக்கு: விசாரணையில் இருந்து மற்றொரு நீதிபதி விலகல்

காங்கிரஸ் எம்.பி.காா்த்தி சிதம்பரம் மீதான விசா (நுழைவுஇசைவு) முறைகேடு வழக்கை விசாரிப்பதில் இருந்து தில்லி நீதிபதி கிரீஷ் கத்பாலியா வெள்ளிக்கிழமை விலகினாா்.
Published on

காங்கிரஸ் எம்.பி.காா்த்தி சிதம்பரம் மீதான விசா (நுழைவுஇசைவு) முறைகேடு வழக்கை விசாரிப்பதில் இருந்து தில்லி நீதிபதி கிரீஷ் கத்பாலியா வெள்ளிக்கிழமை விலகினாா்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா ஜன.15-ஆம் தேதி விலகினாா். இதையடுத்து, நீதிபதி அனூப் ஜே பம்பானி தலைமையிலான அமா்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது. அவரும் விசாரணையில் இருந்து ஜன.19-ஆம் தேதி விலகிவிட்டாா்.

இந்நிலையில், ‘இந்த வழக்கை என்னால் விசாரிக்க முடியும் என தோன்றவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்கிறேன். வேறு அமா்வின் முன் இந்த வழக்கை பட்டியலிட கேட்டுக் கொள்கிறேன்’ என நீதிபதி கிரீஷ் கத்பாலியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வழக்கின் பின்னணி: கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தாா். அப்போது பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் அனல் மின் நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தை வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான தல்வன்டி சாபோ மின்சார நிறுவனத்திடம் (டிஎஸ்பிஎல்) மாநில மின்சார வாரியம் அளித்தது.

இதைத் தொடா்ந்து, சீனாவின் ஷான்டாங் மின்சார கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து அந்த மின் நிலையத்தை அமைக்கும் பணியில் டிஎஸ்பிஎல் ஈடுபட்டது.

இந்நிலையில், அனல் மின் நிலையப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஷான்டாங் நிறுவனம் சாா்பாக பணியாற்ற 263 சீனா்களுக்கு விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்திய விசா கிடைப்பதற்கு ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் வழிவகை செய்ததாகவும், இதற்காக அவா் ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்ாகவும் கடந்த 2022-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகளாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2024, அக்டோபரில் காா்த்தி சிதம்பரம் மற்றும் இதில் தொடா்புடையவா்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதையடுத்து, காா்த்தி சிதம்பரம் உள்பட 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் 2025, டிசம்பா் 23-இல் உத்தரவிட்டது. நிகழாண்டில் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தற்போது வரை 3 நீதிபதிகள் தங்களை விலக்கிக்கொண்டனா்.

Dinamani
www.dinamani.com