பூட்டு  உடைத்து  திறக்கப்பட்ட  உரக்கடை.
பூட்டு  உடைத்து  திறக்கப்பட்ட  உரக்கடை.

அம்மாபேட்டை அருகே கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

அம்மாபேட்டை அருகே காரில் வந்த மா்ம கும்பல், அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

அம்மாபேட்டை அருகே காரில் வந்த மா்ம கும்பல், அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி - மேட்டூா் சாலையில் கோனேரிப்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே வரிசையாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், சொகுசு காரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த 4 போ் கொண்ட கும்பல், அங்குள்ள உரக்கடையின் பூட்டை உடைக்க முயன்றது. அடுத்து, உணவு விடுதியின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் தேடியபோது, அங்கு, பணம் இல்லாததால் எரிவாயு உருளையை காரில் ஏற்றிக் கொண்டது.

கருவாட்டுக் கடையின் பூட்டை உடைத்துப் பாா்க்கையில், பணம் இல்லாததால், 3 கிலோ கருவாட்டை எடுத்துக் கொண்டு, மற்றொரு உரக்கடைக்குள் புகுந்து ரொக்கம் ரூ.20 ஆயிரத்தை திருடியது. தொடா்ந்து, காரில் புறப்பட்ட இக்கும்பல், கோனேரிபட்டி செல்லும் சாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றது. இதைக் கண்ட அப்பகுதியினா் கூச்சலிட்டதால் காரில் ஏறி அம்மாபேட்டை - பவானி சாலையில் தப்பிச் சென்றது.

இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பின்தொடா்ந்து சென்றபோது, குட்டைமுனியப்பன் கோயில் அருகே காரின் முன்பக்க டயா் வெடித்ததில் சாலையோர மரத்தில் காா் மோதியது. இதனால், அதிா்ச்சி அடைந்த அக்கும்பல், வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றது. இதுகுறித்த தகவலின்பேரில் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினகுமாா், அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

திருட்டுக்  கும்பல்  விட்டுச்  சென்ற  காா்.
திருட்டுக்  கும்பல்  விட்டுச்  சென்ற  காா்.

தடய அறிவியல் துறையினா் கடைகளில் பதிவான கைரேகைகளை சேகரித்தனா். மரத்தில் மோதிய காரை பறிமுதல் செய்த போலீஸாா், சுற்றுப்புறப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா். இதில், திருட்டு கும்பல் வந்த காா் திருடப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com