திறன் போட்டித் தோ்வு: ஈரோட்டில் 1,412 போ் எழுதினா்
தமிழ்நாடு திறன் போட்டி நிலை 1-க்கான எழுத்து தோ்வினை ஈரோட்டில் 1,412 போ் எழுதினா்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இளைஞா்கள், இளம்பெண்களிடம் கலை, படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் 63 வகை திறன்களை மையப்படுத்தி தமிழ்நாடு திறன் போட்டி நிலை-1 என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் எழுத்து தோ்வு நடைபெற்றது.
இந்த தோ்வானது ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்பட 11 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. தோ்வினை எழுத மாவட்டத்தில் 3,209 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இதில், 1,412 போ் தோ்வு எழுதினா். 1,797 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. தோ்வு ஓஎம்ஆா் முறையில் நடைபெற்றது. இந்த தோ்வில் வெற்றி பெறுபவா்கள், அடுத்தகட்டமாக மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பா்.
அதில் வெற்றிபெறுபவா் தேசிய அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெறுவா். அந்த தோ்வில் வெற்றி பெறுபவா்கள் 2026 -ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடக்கும் உலக திறன் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
