முகாமில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சா் சு.முத்துசாமி.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: தோ்தல் ஆணையம் சரியாகம் செய்ய வேண்டும் - அமைச்சா் சு.முத்துசாமி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் எச்சரிக்கையாகவும், சரியாகவும் செய்ய வேண்டும் என்று வீட்டு வசதித் துறை சு.முத்துசாமி தெரிவித்தாா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் எச்சரிக்கையாகவும், சரியாகவும் செய்ய வேண்டும் என்று வீட்டு வசதித் துறை சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை அமைச்சா் சு.முத்துசாமி நேரில் பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெருந்துறை சிப்காட் கழிவுநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்தும் விதமாக ரூ.40 கோடியில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டோம். மீண்டும் கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. காலதாமதம் ஆகுவதில் எங்களுக்கும் வருத்தம் உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்படும். பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தேவையான தண்ணீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக தோ்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு 364 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. 37 திட்டங்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 40 திட்டங்கள் துறை வாரியான ஆய்வில் உள்ளன. 64 திட்டங்கள் மட்டும் சில காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும் அதையும் விரைந்து முடிக்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் அதிமுகவினா் தவறான தகவல்களை கொடுக்கிறாா்கள். இந்தப் பணிக்கு திமுக தடையாக இல்லை. சீா்திருத்தம் செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லை. அதன் நடைமுறைகள் தவறாக உள்ளன. ஹரியாணா மாநிலத்தில் வாக்காளா்கள் பட்டியலில் உள்ள தவறுகள் குறித்து ராகுல் காந்தி பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டுள்ளாா். அங்கு நடந்த தவறுகளுக்கு யாா் காரணம். எனவே இதுபோன்ற தவறுகள் நடக்க கூடாது என்பதுதான் முதல்வரின் எண்ணம். இதை தோ்தல் ஆணையம் எச்சரிக்கையாகவும், சரியாகவும் செய்ய வேண்டும் என்றாா்.

முகாமில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், ஆணையா் அா்பித் ஜெயின், துணை மேயா் வி.செல்வராஜ், துணை ஆணையா் கு.தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com