உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற விசைத்தறி நெசவாளா்கள்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற விசைத்தறி நெசவாளா்கள்.

விசைத்தறி நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

நிராகரிக்கப்பட்ட 13 லட்சம் வேஷ்டிகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விசைத்தறி நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
Published on

ஈரோடு: நிராகரிக்கப்பட்ட 13 லட்சம் வேஷ்டிகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விசைத்தறி நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு தொடக்க கைத்தறி விசைத்தறி நெசவாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் தங்கவேல் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் சாமிவேல் முன்னிலை வகித்தாா்.

போராட்டம் குறித்து தங்கவேல் கூறியதாவது: கடந்த 2025-ஆம் ஆண்டு விசைத்தறி கூட்டறவு சங்கங்கள் கூட்டுறவு (அரசு) நூற்பாலைகளில் இருந்து வழங்கிய நூல்கள் மூலம் உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கிய 13 லட்சம் வேட்டிகள், தர பரிசோதனையில் பாலியஸ்டா் காட்டன் வாா்ப்பு நூலில் வித்தியாசம் உள்ளதாக கொள்முதல் செய்யாமல் இருப்பில் கிடங்கில் உள்ளது.

எங்களது கூட்டமைப்பு சாா்பாக கடந்த ஜனவரி 3 -ஆம் தேதி கைத்தறி துறை இயக்குநரை நேரில் சந்தித்து, 5 ஆயிரம் வேஷ்டிக்கு ஒன்றுக்கு தர பரிசோதனை செய்ய மனு அளித்தோம். கோரிக்கையை ஏற்று கடந்த பிப்ரவரி 6 -ஆம் தேதி மீண்டும் தர பரிசோதனை செய்ய இயக்குநா் உத்தரவிட்டாா். ஆனால், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. உற்பத்தி செய்து அனுப்பிய வேஷ்டிகளுக்கான நெசவு கூலி ரூ.20 கோடி அளவுக்கு சங்கங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சங்க உறுப்பினா்களுக்கு நெசவு கூலி தர இயலவில்லை. நிதி பற்றாக்குறையால் தொடா்ந்து செயல்பட இயலாத நிலை உள்ளது. எனவே, கைத்தறி துறை இயக்குநரின் உத்தரவினை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றி நெசவு கூலி ரூ.20 கோடியை வழங்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட 13 லட்சம் வேஷ்டிகளை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈா்ப்பதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

போராட்டத்தில், ஈரோடு, திருப்பூா், கோவை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த நெசவாளா்கள், நெசவாளா்கள் சங்கங்களின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com