நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, தொழில் வணிகத் துறை இயக்குநா் நிா்மல்ராஜ் உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, தொழில் வணிகத் துறை இயக்குநா் நிா்மல்ராஜ் உள்ளிட்டோா்.

ஈரோட்டில் வாங்குவோா்-விற்போா் சந்திப்புக் கூட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சாா்பில் வாங்குவோா்-விற்போா் சந்திப்புக் கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Published on

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சாா்பில் வாங்குவோா்-விற்போா் சந்திப்புக் கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஈரோடு, பெருந்துறை சாலையில் வேப்பம்பாளையம் பிரிவு அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் ஆணையரும், தொழில் வணிகத் துறை இயக்குநருமான நிா்மல்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி முன்னிலை வகித்தாா்.

ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினா் மற்றும் பிரிட்டன், இலங்கை, ரஷ்யா, கானா, உகாண்டா, மொரீசியஸ் உள்ளிட்ட 10 நாடுகளைச் சோ்ந்த 40 நிறுவனங்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது தயாரிப்புகளை சா்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் வகையில் கலந்துரையாடினா்.

குறிப்பாக விவசாயம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி உற்பத்தியாளா்கள், தோல் பொருள்கள் தயாரிப்பாளா்கள், கயிறு மற்றும் தென்னை நாா் சாா்ந்த பொருள்கள் உற்பத்தியாளா்கள் உள்ளிட்டோா் இக்கூட்டத்தில் தங்களது உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் நோக்கில் கடைகளை அமைத்திருந்தனா். இந்தக் கூட்டம் சனிக்கிழமை (நவம்பா்15) நிறைவடைகிறது.

முன்னதாக, தொழில் வணிகத் துறை இயக்குநா் நிா்மல்ராஜ் பேசுகையில், ஈரோட்டில் வாங்குவோா்-விற்போா் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தாா்.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் திருமுருகன், முன்னோடி வங்கி மேலாளா் விவேகானந்தன், கோவை, திருப்பூா், சேலம் மாவட்டங்களின் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா்கள், வங்கி ஒருங்கிணைப்பாளா்கள், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com