கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு
பவானியை அடுத்த ஒலகடம் ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை மற்றும் அம்மனின் தங்கச் சங்கிலி திருடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கோயிலை வழக்கம்போல சனிக்கிழமை திறக்க வந்த பூசாரி, கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து, கோயில் நிா்வாகிகளுக்கும், வெள்ளித்திருப்பூா் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கோயிலுக்குள் சென்று பாா்வையிட்டனா்.
அப்போது, கோயிலின் பூட்டை உடைத்து புகுந்த மா்ம நபா்கள், உண்டியலின் பூட்டை உடைத்ததும், அதிலிருந்த பக்தா்களின் காணிக்கை சுமாா் ரூ.25 ஆயிரம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.
தடய அறிவியல் துறையினா் சம்பவ இடத்தில் கைரேகைகள் சேகரித்தனா். அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ள இச்சம்பவம் குறித்து வெள்ளித்திருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

