பரோலில் வந்து மீண்டும் சிறை செல்லாத நபா் மீது வழக்குப் பதிவு
பரோலில் வந்த போக்ஸோ குற்றவாளி மீண்டும் சிறை செல்லாததால் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு, காசிபாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). இவரை போக்ஸோ சட்டத்தில் கோவை, புலியகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2021- ஆம் ஆண்டு கைது செய்தனா்.
இந்த வழக்கில் பிரகாஷுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கோவை மத்திய சிறையில் இரண்டே முக்கால் ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி 28 நாள்களுக்கு பரோல் வழங்கப்பட்டது.
மேலும், பரோலில் உள்ள 28 நாள்களும் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் நாள்தோறும் காலை 10.30 மணிக்கு கையொப்பமிட வேண்டும் எனவும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
கடந்த 15- ஆம் தேதியுடன் அவருக்கு பரோல் நிறைவடைந்த நிலையில், கோவை மத்திய சிறையில் ஆஜராகாமல் இருந்துள்ளாா். இதையடுத்து, கோவை மத்திய சிறை அலுவலா் சரவணகுமாா் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பிரகாஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
