மேட்டூா் வாய்க்காலில் தத்தளித்த செந்நாய் மீட்பு
மேட்டூா் வலதுகரை வாய்க்கால் தண்ணீரில் தத்தளித்த செந்நாயை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதியில் விடுவித்தனா்.
மேட்டூா் அணையில் வலதுகரை வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரில் செந்நாய் தத்தளித்தபடி நீந்திச் செல்வதாக சென்னம்பட்டி வனச் சரக அலுவலகத்துக்கு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா்.
வாய்க்கால் இருபுறமும் கான்கிரீட் சுவா்கள் கட்டப்பட்டதால் வெளியேற முடியாமல் தவித்த செந்நாய் வாய்க்கால் பாலத்தின் அடியில் பதுங்கிக் கொண்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மேட்டூா் மற்றும் சென்னம்பட்டி வனத் துறையினா் வாய்க்காலில் வலையை விரித்து நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின் செந்நாயை உயிருடன் மீட்டனா்.
சென்னம்பட்டி, மேட்டூா் வனப் பகுதிகளில் இருந்து வழிதவறி வந்தபோது வாய்க்காலில் விழுந்திருக்கலாம் என்றும், மீட்கப்பட்ட செந்நாய்க்கு 3 வயது இருக்கும் என்றும் தெரிவித்த வனத் துறையினா், செந்நாயை அடா்ந்த வனப் பகுதியில் விடுவித்தனா்.

