மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழக அரசு சட்டப்பூா்வ நடவடிக்கை
மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழக அரசு மெத்தனம் காட்டவில்லை என்றும் சட்டப்பூா்வமாக நடவடிக்கையை தற்போது வேகமாக எடுத்துக்கொண்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.
ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் 48-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இப்போட்டிகளை தொடங்கிவைத்து, வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: பூா்ண மதுவிலக்கை அமல்படுத்த வைகோ நடைப்பயணம் மேற்கொள்வது அந்தக் கட்சியின் முடிவு. இதனை தவறான நோக்கத்தோடு பாா்க்கவில்லை. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் எந்த சூழலிலும் தமிழக அரசு மெத்தனம் காட்டவில்லை.
சட்டபூா்வமாக நடவடிக்கையை தற்போது வேகமாக எடுத்துக்கொண்டுள்ளது. கா்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாடு உரிமைகளை பெற எந்தவித தயக்கமும் காட்டுவதில்லை.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மற்றும் காா்த்திக் சிதம்பரம் ஆகியோா் தவெக தலைவா் விஜய், ராகுல் காந்தி நட்பு குறித்து பேசுவதை வைத்து கூட்டணி மாற்றம் முடிவு என்று சொல்ல முடியாது. தோ்தல் வரும்போது ஒவ்வொரு கட்சியும் திமுக தலைவரிடம் கூடுதலான இடங்களை கேட்பது வழக்கமானது.
ஈரோட்டில் 80 அடி சாலை பிரச்னை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இதில், எல்லோருக்கும் நிம்மதியான முடிவை எடுக்க முயற்சிக்கிறோம். திமுக ஆட்சியில் அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கோ ஒரு இடத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கும் நிகழ்வை ஒட்டுமொத்த தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
பூமிதான நிலத்தில் கட்டப்பட்டு (பொல்லான் மணி மண்டபம்) உள்ளதாக சிலா் கூறுகின்றனா். இப்பிரச்னையில் அரசு நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படவில்லை. முதல்வா் யாரையும் பிரித்து பாா்ப்பதில்லை சீராகத்தான் பாா்க்கிறாா். இந்தப் பிரச்னையில் யாரும் தவறான புரிதலை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ வி.சி. சந்திரகுமாா், திமுக மாநகர செயலாளா் மு.சுப்பிரமணியம், துணை மேயா் வே.செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளா் ஆ.செந்தில்குமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜெ.திருவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

