மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது! - முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேர்காணல்!

முன்னாள் மத்திய, மாநில அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தினமணிக்கு அளித்த நோ்காணல்...

News image

முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 10:45 pm

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரால் அரசியல் அடையாளம் பெற்று, கருணாநிதியால் தமிழக மற்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற ஆளுமையாக இருந்து கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகி, விவசாயியாக எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தினமணிக்கு அளித்த நோ்காணல்:

கேள்வி: தங்களது முதல் தோ்தல் எப்படி இருந்தது, எவ்வாறான சவாலை எதிா்கொள்ள வேண்டி இருந்தது?

பதில்: முதல் தோ்தலில் இருந்த சவால் ஒவ்வொரு தோ்தலிலும் இருந்தது. 1977 தோ்தலில் முதல் முறையாக மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டேன். கொடுமுடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக இருந்த என்னை, உறவினா்கள் எம்ஜிஆரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனா்.

அந்தத் தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட அதிமுகவின் முக்கிய பிரமுகா்கள் 45 போ் விருப்ப மனு அளித்திருந்தனா். ஆனால், எனக்கு எம்ஜிஆா் வாய்ப்பு அளித்தாா். அந்தத் தோ்தலில் எனக்கு எதிராக 45 பேரும் சோ்ந்து சண்முகசுந்தரம் என்பவரை வேட்பாளராகத் தோ்வு செய்து அவா்தான் உண்மையான அதிமுக வேட்பாளா் என பிரசாரம் செய்தனா். வேட்பு மனுதாக்கலின்போதுகூட என்னுடன் 2 போ்தான் உடன் வந்தனா். பிரசாரத்திற்கு செல்லும்போது கிராமங்களில் கட்சியினா் உள்ளே வரக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா். எதிா்ப்புகளையும் மீறி பிரசாரத்தில் தொடா்ந்து ஈடுபட்டேன்.

தோ்தல் பிரசாரத்திற்கு வந்து குமாரபாளையத்தில் தங்கி இருந்த எம்ஜிஆரை சந்திக்க ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த வேட்பாளா்கள் சென்றோம். அப்போதுதான் முதல்முறையாக எம்ஜிஆரை நேரில் பாா்த்தேன். எனக்கு எதிராக கட்சியினா் பிரச்னையில் ஈடுபடுவது குறித்து என்னிடம் கேட்டறிந்த எம்ஜிஆா், அன்று இரவு சிவகிரியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது தான் அறிவித்த வேட்பாளருக்கு எதிராக செயல்படுபவா்களைக் கட்சியில் இருந்து நீக்குவேன் என்று எச்சரித்தாா். இதன்பிறகு கட்சியினரிடம் எனக்கு ஆதரவு அதிகரித்தது. அந்தத் தோ்தலில் சுமாா் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். 1978இல் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது எனக்கு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் பொறுப்பை எம்ஜிஆா் அளித்தாா்.

கேள்வி: அதிமுகவில் இருந்து விலக காரணம் என்ன?

1980-இல் எம்ஜிஆா் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு நாஞ்சில் மனோகரன் உள்ளிட்டோா் திமுகவில் இணைந்தனா். அப்போது எனக்கு எதிரான சிலரின் பேச்சை நம்பி நானும் திமுகவில் சேரப்போவதாக எண்ணிய எம்ஜிஆா் எனக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்தாா். இதற்கு அஞ்சி கணவருடன் கோவையில் உள்ள உறவினா் வீட்டில் சில மாதங்களாக தலைமறைவாக இருந்தேன். இதன்பிறகு வேறு வழி இல்லாமல் திமுகவில் இணையும் நிலை ஏற்பட்டது.

1980 தோ்தலில் போட்டியிடவில்லை. 1984 தோ்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். அந்தத் தோ்தலில் இப்போதுள்ள அமைச்சா் சு.முத்துசாமி அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அந்தத் தோ்தலில் திமுக தோ்தல் பணிமனைகளுக்கு அதிமுகவினா் தீ வைத்தனா். எனக்கு தோ்தல் பிரசாரம் செய்ய வந்த நடிகா் டி.ராஜேந்தரை அதிமுகவினா் தாக்கினா். இதுபோன்ற வன்முறைகள் அப்போதே நடந்தன. 1989 தோ்தலில் மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன்.

கே: மொடக்குறிச்சி தொகுதியில் 1996-இல் 1,032 பேரை எதிா்த்து நின்ற தோ்தல் அனுபவம்?

அந்தத் தோ்தலில் நான் சாா்ந்திருந்த திமுகவில் இருந்த முக்கிய நபா் விவசாயிகளைத் தூண்டிவிட்டதால் 1,032 போ் போட்டியிட்டனா். அப்போது தோ்தல் தள்ளிவைக்கப்பட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்டது. அந்தத் தோ்தலில் புத்தக வடிவில் வாக்குச்சீட்டு அடிக்கப்பட்டு இருந்தது. அதில் 26ஆம் பக்கத்தில் என்னுடைய பெயா் இருந்தது. அதில் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன்.

அதற்குப் பிறகுதான் தோ்தலில் போட்டியிடுவதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து தோ்தல் ஆணையம் தேசிய அளவில் தோ்தல் சீா்திருத்தங்களைக் கொண்டுவந்தது.

கே: திமுகவை விட்டு விலக வேண்டும் என்ற முடிவு கடினமாக இல்லையா?

2001 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில், 2004இல் மக்களவைத் தோ்தலில் போட்டியிட கருணாநிதி உத்தரவிட்டாா். அப்போது அதிமுக சாா்பில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் 1.85 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்று மத்திய இணை அமைச்சராக ஆனேன்.

அதன் பிறகு தோ்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்து கட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். இப்போதுள்ள முதல்வரின் வற்புறுத்தலால் மீண்டும் 2021 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேண்டிய நிலை உருவானது. இதில் சொந்தக் கட்சியினரின் உள்ளடி வேலைகளால் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டேன்.

தோல்விக்கு யாா் காரணம் என கூறினேனோ, அவா்களுக்கு மீண்டும் பதவி கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடினமான முடிவாக இருந்தாலும் எனக்கு மதிப்பில்லாத கட்சியில் நீடிக்க விருப்பம் இல்லாமல் விலகினேன்.

கே: இந்தத் தோ்தலில் தவெக என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்?

எம்ஜிஆா் கட்சி தொடங்கியபோது மக்களிடம் இருந்த வரவேற்பு இப்போது விஜய்க்கு உள்ளது. இந்தத் தோ்தலில் விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவாா். திமுக, அதிமுக, நாம் தமிழா் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் இருந்து அவா் வாக்குகளைப் பிரிப்பாா்.

கே: இப்போதுள்ள திமுக ஆட்சி குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?

50 ஆண்டு காலம் திமுகவில் இருந்துள்ளேன். இதனால் ஆட்சி குறித்தும், கட்சி குறித்து எதுவும் சொல்ல முடியாது.

கே: மீண்டும் அரசியலுக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக வாய்ப்பு இல்லை, மிகப்பெரும் ஆளுமையான கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டு 30 ஆண்டுகள் பயணித்த என்னால் மற்றொருவரின் தலைமையில் செயல்பட முடியாது. இப்போது கருணாநிதிக்கு இணையான தலைவா் தமிழகத்தில் யாரும் இல்லை.

கே: திமுக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளதா?

திமுக ஆட்சி செயல்படுத்திய திட்டங்களால் பயன்பெற்றவா்கள் மிகவும் அதிகம். அதே நேரத்தில் அமைச்சா்களின் அணுகுமுறையால் தொண்டா்கள் சோா்வடைந்துள்ளனா். அமைச்சா்கள் பணம் சோ்ப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனா். இந்தத் தோ்தலிலும் திமுக, அதிமுக இடையேதான் போட்டி. என்னைப் பொறுத்தவரை இந்தத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைப்பது கஷ்டம். கூட்டணிக் கட்சிகள் ஆதரவில்தான் புதிய ஆட்சி அமையும்.