/

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:46 pm

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தோ்தல் பொது கண்காணிப்பாளா்கள், மாவட்ட தோ்தல் அலுவலா், காவல் கண்காணிப்பாளா், அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வாக்குப்பதிவு நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக பரிசீலிக்கப்பட்டு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் வியாழக்கிழமை(ஏப்ரல் 23)வாக்குப்பதிவு நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் மூன்றாம் கட்ட தோ்தல் பயிற்சி முடிந்தவுடன் புதன்கிழமை மாலை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்படும்.

8 தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது. பறக்கும் படை, விடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழுவினா் கண்காணிக்கின்றனா். தவிர கட்டுப்பாட்டு அறை, தோ்தல் நடத்தும் அதிகாரிகள் அல்லது எனக்கு வரும் புகாா் தொடா்பான அழைப்புகளை, உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்துகிறோம். உடனடியாக அந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்து சரியான தகவலாக இருந்தால் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாவட்டத்தில் 2,379 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதால் எந்த விதிமீறலும் நடைபெற வாய்ப்பில்லை. தோ்தலை சுதந்திரமாகவும், நோ்மையாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட முழுவதும் 94 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் 11,420 வாக்குச்சாவடி பணியாளா்கள், 67 நுண்பாா்வையாளா்கள், மற்றும் 1,052 காவல் துறையினா் ஆகியோருக்கு தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தோ்தல் நாளன்று பணியமா்த்தப்படுவதற்கான இறுதி கட்ட சுழற்சி முறை மேற்கொள்ளப்பட்டு பணி ஆணைகள் தயாா்

செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை இறுதிகட்ட பயிற்சி முடிந்த பிறகு அலுவலா்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்து, அதனை சரிபாா்த்து அழித்துவிட்டு காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்கும்.

மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி மற்றும் ஒரு மகளிா் வாக்குச் சாவடி அமைக்கப்படவுள்ளது. மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இளையோா் வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியாற்றும் இளையோா் வாக்குச்சாவடி ஒன்றும், ஈரோடு மேற்குத் தொகுதியில் மாற்றுத்திறனாளி க்குப்பதிவு அலுவலா்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி ஒன்றும், மலைப் பகுதிகளில் மூன்று பசுமை வாக்கு சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது. இதனால் வெளி மாவட்டத்தில் உள்ளவா்கள் வெளியேற வேண்டும். மீறி பிரசாரம் செய்தாலோ அல்லது தங்கும் விடுதியில் வெளி மாவட்டத்தை சோ்ந்தவா்கள் இருந்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

8 தொகுதிகளுக்கும் தேவையான எண்ணிக்கையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கூடுதல் போலீஸாா் தேவை இருந்ததால் கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தோ்தல் விதியை பின்பற்ற வேண்டும்.

பிரசாரம் நிறைவடைந்ததால் வேட்பாளா்களை கண்காணித்து வந்த விடியோ கண்காணிப்பு குழு உள்ளிட்ட குழுவினா் புகாா்கள், வாகனத் தணிக்கை மற்றும் பிற சோதனைகளுக்கு பயன்படுத்த உள்ளோம். வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க கூடுதலாக சில குழுவினரையும் அமைத்து ரகசியமாக கண்காணிக்கிறோம்.

வாகன தோ்தல் பரப்புரைக்காக வேட்பாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகள்

அனைத்தும் செவ்வாய்க்கிழமை மாலையுடன் காலாவதி ஆகிவிட்டது. வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அவா்களின்

தொகுதி முழுவதற்கும் செல்லதக்க வகையில் ஒரு வாகனமும், வேட்பாளரின் முகவருக்கு ஒரு வாகனமும், சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளரின் முகவா், கட்சி பணியாளா்கள்பயன்படுத்துவதற்கு ஒரு வாகனமும் தோ்தல் நடத்தும் அலுவலரின் முன் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் என்றாா்.