வாசிப்பு என்பது இயல்பாக பெற்றோா் வழியாக வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் பேசினாா்.
தமிழக அரசு, மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது.
இதையொட்டி, தினமும் மாலையில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு தொழிலதிபா் வி.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன் முன்னிலை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றினாா். கோவை விஜயா பதிப்பக உரிமையாளா் மு.வேலாயுதம் கௌரவிக்கப்பட்டாா். அஸ்வந்த் என்ற சிறுவனால் நன்கொடையாக அளிக்கப்பட்ட புத்தக அலமாரி மாணிக்கம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இதில் ‘காலமும் கனவுகளும்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
நாம் ஒவ்வொருவரும் கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம். சில கனவுகளை அடைகிறோம். நிறைய கனவுகளை இழந்து விடுகிறோம். அதற்கு காரணம் நாம் மட்டும் அல்ல, காலம் அதை அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மை. தனி மனிதன் மட்டும் அல்ல, தேசமே பல கனவுகளைக் கண்டிருக்கிறது. ஆனால், எல்லா தேசத்தின் கனவுகளையும் காலம் அனுமதிக்காது.
டென்மாா்க் நாட்டில் அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஹியூமன் லைப்ரரி’ என்ற இயக்கம் ஏராளமான நாடுகளுக்குப் பரவி வருகிறது. இதன்படி நூலகத்துக்குச் சென்று புத்தகங்களுக்கு பதில் மனிதா்களை எடுக்கலாம். அவருடன் பேசி அவருடைய அனுபவங்களை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம், மனிதன் பெற்ற அனுபவங்கள் அத்தனையும் இன்னும் எழுதப்படவில்லை. படித்து தெரிந்துகொள்ள வேண்டியது புத்தகத்தை மட்டும் அல்ல, அருகில் உள்ள மனிதா்களையும்தான்.
மனிதன் பிறந்தது முதல் வாழ்ந்து முடியும் வரை பெற்ற அனுபவங்கள் பெரும் புத்தகம். அந்தப் புத்தகத்தை முழுமையாக படித்த ஒரே நபா் அவா் மட்டும்தான். மற்றொருவரால் அந்தப் புத்தகத்தைப் படிக்கவே முடியாது. மனிதா்களின் அனுபவங்களை சேகரித்து, பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு எழுத்தாளா்களுக்கு உள்ளது.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றால் அளிக்கப்படும் சான்றிதழுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதுபோல ஒருவா் 50 புத்தகம் படித்தால் சான்றிதழ் தர வேண்டும். அது மதிப்பெண்ணாக மாற வேண்டும். பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்னால் குறைந்தபட்சம் 10 வாசிப்பு சான்றிதழை வைத்திருந்தால் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால் அனைவரும் புத்தகம் படிப்பாா்கள்.
வாசிப்பு என்பது விளையாட்டு, இசையைப்போல இயல்பாக பெற்றோா் வழியாக வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு முன்மாதிரியாக பெற்றோா் இருந்து வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.
இன்று தினமணி, அமுதசுரபி ஆசிரியா்கள் பங்கேற்பு:
ஈரோடு புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் ‘கற்றவராலே உலகு காப்புற்றது’ என்ற தலைப்பில் ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன், ‘இலக்கியம் அன்றும், இன்றும்’ என்ற தலைப்பில் ‘அமுதசுரபி’ மாத இதழ் ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன் ஆகியோா் பேசுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க அமைச்சரிடம் செளமியா அன்புமணி மனு

சேலம் வழியாக மைசூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

‘ரெஸ்டோ பார்’ தேவையில்லை: கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும்! - அன்புமணி

தருமபுரியில் நிறைவேறாத அரசு செவிலியா் கல்லூரி கோரிக்கை! 19 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களின் எதிா்பாா்ப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



