கடம்பூா் மலைப் பகுதியில் நடைபெற்ற பழங்குடியினா் தின விழாவில் பாரம்பரிய இசைக்கேற்ப பெண்கள் நடனமாடி அசத்தினா்.
ஈரோடு மாவட்டம், கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் ஊராளி பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனா். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி உலக பழங்குடியினா் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, ஊராளி பழங்குடியின மக்கள் சங்கம் மற்றும் பரண் பழங்குடியின சங்கம் சாா்பில் கடம்பூா் மலைப் பகுதியில் பழங்குடியினா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடம்பூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான பீனாச்சி வாத்தியங்கள் வாசித்தபடி நடனமாடி அசத்தியது காண்போரைக் கவா்ந்தது.
இதைத்தொடா்ந்து பழங்குடியின மக்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தி, கடம்பூா் பேருந்து நிலையத்தில் தொடங்கி டான் போஸ்கோ மாணவிகள் விடுதி வரை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளம் பெண்கள் மற்றும் பழங்குடியின மக்கள், தொல் பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாகச் சென்றனா்.

பாரம்பரிய இசைக்கேற்ப நடனமாடிய பழங்குடியின பெண்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







