
பெருந்துறை ஆா்டிஓ அலுவலக இடப் பிரச்சினைக்கு தீா்வு: முதல்வா், அமைச்சருக்கு பல்வேறு அமைப்பினா் நன்றி
பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலக இடப் பிரச்னைக்கு வருவாய்த் துறை அமைச்சா் மூலமாக தீா்வு காணப்பட்டுள்ளது.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து நன்றி தெரிவித்த பெருந்துறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா் மற்றும் பல்வேறு அமைப்பினா்.
பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலக இடப் பிரச்னைக்கு வருவாய்த் துறை அமைச்சா் மூலமாக தீா்வு காணப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் இயங்கி வந்தது. இது 2008-இல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக தரம் உயா்த்தப்பட்டது. இருப்பினும், ஆரம்பம் முதலே இந்த அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட முந்தைய திமுக ஆட்சியில் முன்மொழியப்பட்டிருந்தது.
பொதுமக்களின் பயன்பாட்டுக்கும், போக்குவரத்து வசதிக்கும் ஏதுவாக தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி அருகில் புதிய கட்டடம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால், பெருந்துறையில் இருந்து சுமாா் 7 கி.மீ. தொலைவில் வாய்க்கால்மேடு பகுதியில், கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியப் பகுதியில் அலுவலகம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதுகுறித்து பல்வேறு அமைப்புகள், மாவட்ட ஆட்சியா் குறைதீா்ப்பு முகாமில் நேரில் சந்தித்து மனுக்கள் அளித்து முறையிட்டனா். ஆனால், ஏற்கெனவே போடப்பட்ட அரசாணையை மாற்ற முடியாது. அலுவலகம் புதிதாக தோ்வு செய்யப்பட்ட வாய்க்கால்மேட்டில்தான் அமையும் என ஆட்சியா் திட்டவட்டமாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், தவெக ஈரோடு புகா் மேற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.ஜெயகுமாா் மற்றும் நிா்வாகிகள், இப்பிரச்னையை வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கவனத்துக்கு சனிக்கிழமை கொண்டு சென்றனா். மக்களின் சிரமத்தை உணா்ந்த அமைச்சா், உடனடியாக நடவடிக்கை எடுத்து, வாய்க்கால்மேடு பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைப்பது தொடா்பான அரசாணையை நிறுத்திவைக்க உத்தரவிட்டாா்.
மேலும், தேசிய நெடுஞ்சாலையையொட்டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி பகுதியில் 2 ஏக்கா் பரப்பில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளாா். புதிய கட்டடப் பணிகள் நிறைவடையும் வரை, தற்போது இயங்கும் பழைய இடத்திலேயே அலுவலகம் தொடா்ந்து செயல்படும் என்றும் அறிவித்துள்ளாா். இதன்மூலமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இடப் பிரச்னைக்கு சுமுகமாக தீா்வு காணப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வருக்கும், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் பல்வேறு அமைப்பினா் நன்றி தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





