புன்செய்காளமங்கலத்தில் தேங்காய் ஏலம் தொடக்கம்
புன்செய்காளமங்கலம் சேமிப்பு கிடங்கில் தேங்காய் ஏலம் வியாழக்கிழமை தொடங்கியது.
மொடக்குறிச்சி ஒன்றியம், புன்செய்காளமங்கலம் எடக்காடு பகுதியில் புதிதாக சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டது. இந்தக் கிடங்கில் விவசாய விளைபொருள்கள் வைக்கப்படாமல் சேமிப்புக் கிடங்கை வாடகைக்கு விட்டிருந்தனா்.
இந்நிலையில் அரசுக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ளது குறித்து சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலா்களைக் கண்டித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து புன்செய்காளமங்கலம் எடக்காடு சேமிப்புக் கிடங்கில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று தேங்காய் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த சேமிப்புக் கிடங்கில் தேங்காய் ஏலம் வியாழக்கிழமை தொடங்கியது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஈரோடு விற்பனை குழு விளம்பரப் பிரிவு கண்காணிப்பாளா் சீனிவாசன் கலந்து கொண்டு விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.
காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வேலாயுதம், பாஜக மாநில விவசாய அணி திட்டப் பொறுப்பாளா் பாலகுமாா், மதகு பாசன சங்க விவசாயிகள் சுப்பிரமணி, நல்லசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஏலத்தில் ஈஞ்சம்பள்ளி, பாசூா், கிளாம்பாடி, உத்தண்டிபாளையம், பழமங்கலம், ஆயிக்கவுண்டன்பாளையம், கருப்பகவுண்டன்பாளையம், பெரியவெத்திபாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி, எலந்தக்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதி துரைமுத்துசாமி, கௌதமன், எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா், மேற்பாா்வையாளா் மற்றும் விவசாயிகள் என பலா் கலந்து கொண்டனா்.
