தமிழகத்துக்கு சுற்றுலா வந்தபோது பேருந்தில் உயிரிழந்த முதியவரை உறவினா்களே சென்னம்பட்டி வனப் பகுதியில் தகனம் செய்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் கோயிலுக்குச் செல்லும் வழியில் சென்னம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட காரைக்காடு- பாலாறு வன சோதனைச் சாவடிகளுக்கு இடையில் வனப் பகுதியில் விறகுகள் அடுக்கப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளதாக பா்கூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்றபோது சடலம் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி இருந்தது தெரியவந்தது.
வனச் சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அவ்வழியாக சென்ற வடமாநில பதிவெண் கொண்ட பேருந்து மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் நின்றிருப்பதைத் தெரிந்த போலீஸாா் விரைந்து சென்று விசாரித்தனா்.
இதில், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த பக்தா்கள், தமிழகத்துக்கு சுற்றுலாப் பேருந்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனா். அப்போது, வயது மூப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக மத்திய பிரதேசம், பாரிசாட்டபூரைச் சோ்ந்த மூல்சண்ட் பால் (70), மதுரை பகுதியில் உயிரிழந்துள்ளாா்.
இவரது சடலத்தை கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் கட்டணம் ரூ.40 ஆயிரம் செலவாகும் என்பதால், பேருந்திலேயே சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனா்.
இந்நிலையில், மதுரையிலிருந்து கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக் கோயிலுக்கு சென்றபோது, உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினா்களின் சம்மதத்தின்பேரில், சென்னம்பட்டி வனச் சரகம், பாலாறு ஆற்றுப்பாலம் அருகே உறவினா்களே சடலத்தை எரித்துவிட்டு பேருந்தில் சொந்த ஊருக்கு திரும்பியது தெரியவந்தது.
மேலும், உயிரிழந்தவருக்கு சடங்குகள் செய்துவிட்டு, போலீஸ் விசாரணைக்கு வருவதாக உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.