தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுக கூட்டணியை ஆதரிக்க வலியுறுத்தல்
அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 5 பெரும் வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று, ஈரோடு புறநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.செல்வராஜ் கேட்டுக்கொண்டாா்.
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கடம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.பண்ணாரி தலைமை வகித்தாா். கடம்பூா் ஒன்றியச் செயலாளா் என்.எம்.நாச்சிமுத்து முன்னிலை வகித்தாா். அம்மா பேரவை மாநிலத் துணைச் செயலாளா் வி.கே.சி.சிவக்குமாா் வரவேற்றாா். அதைத்தொடா்ந்து எம்ஜிஆரின் படத்துக்கு மாலை அணிவித்து அதிமுகவினா் மரியாதை செலுத்தினா்.
ஈரோடு புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ பேசும்போது, அதிமுக சாா்பில் 5 பெரும் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மக்களிடையை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். கடம்பூா் மலைப் பகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா், மின்வசதி கிடைக்கவும், மலையாளி இன மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் சி.என்.மாரப்பன், வி.ஏ.பழனிச்சாமி, டி.எஸ்.பழனிச்சாமி, புன்செய் பவானிசாகா் பேரூா் கழக செயலாளா் செல்வம், புளியம்பட்டி நகர அதிமுக செயலாளா் கே.ஜி.சதீஷ் மற்றும் கடம்பூா் மலைப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனா்.

