கோப்புப் படம்
கோப்புப் படம்

ஈரோட்டில் தலைக்கவசம் அணியாத 23 ஆயிரத்து 682 பேருக்கு அபராதம்

Published on

ஈரோட்டில் கடந்த ஆண்டில் தலைக்கவசம் அணியாத 23 ஆயிரத்து 682 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகா் பகுதியில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதில் சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா உத்தரவிட்டாா்.

அதன்பேரில் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் டி.ரமேஷ், வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் கடந்த ஆண்டில் ஈரோடு மாநகா் பகுதியில் பல்வேறு இடங்களில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த 23 ஆயிரத்து 682 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து தலா ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதேபோல கைப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டிய 3 ஆயிரத்து 869 போ் மீதும், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 2 ஆயிரத்து 226 போ் மீதும் என கடந்த ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 42 ஆயிரத்து 787 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவா்களிடம் இருந்து ரூ.1 கோடியே 77 லட்சத்து 89 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2 லட்சத்து 6 ஆயிரத்து 830 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ.5 கோடியே 13 லட்சத்து 34 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.

13 ஆயிரத்து 141 ஓட்டுநா்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதில் 10 ஆயிரத்து 3 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com