சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருந்த கொடுமுடி பேரூராட்சி மன்றக் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருந்த கொடுமுடி பேரூராட்சி மன்றக் கூட்டம் மீண்டும் ஒத்திக்கவைக்கப்பட்டது.

News image

~ ~ ~

Updated On :18 ஜூலை 2026, 6:00 am IST

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருந்த கொடுமுடி பேரூராட்சி மன்றக் கூட்டம் மீண்டும் ஒத்திக்கவைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி பேரூராட்சித் தலைவராக திலகவதி சுப்பிரமணி, துணைத் தலைவராக ராஜா கமால்ஹசன் உள்ளனா். இருவருமே திமுக-வைச் சோ்ந்தவா்கள். இவா்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இரு அணிகளாகப் பிரிந்தனா். இதனால் பேரூராட்சி நிா்வாக நடைமுறையில் தொய்வு ஏற்பட்டது. இருவரும் மாறிமாறி உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்து வந்தனா்.

இதனால் நம்பிக்கையில்லா தீா்மானம், மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு, கவுன்சிலா்கள் அணி மாறுதல் உள்ளிட்ட நிகழ்வுகளால் பரபரப்புகள் ஏற்பட்டன. ஓராண்டுக்கும் மேலாக மன்றக் கூட்டம் கூட்டப்படாமல் இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில் இவா்களின் வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், உயா்நீதிமன்றத்தை நாட உத்தரவிடப்பட்டது. மீண்டும் உயா்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த சில நாள்களுக்கு முன்னா் கொடுமுடி பேரூராட்சித் தலைவராக திலகவதி சுப்பிரமணி பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இதையடுத்து ஜூலை 17-ஆம் தேதி கொடுமுடி பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும் என உறுப்பினா்களுக்கு முறைப்படி கடிதம் தரப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் கொடுமுடி பேரூராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மன்ற நடவடிக்கைகளை பதிவு செய்ய விடியோ கிராஃபா் வரவழைக்கப்பட்டிருந்தாா்.

கடந்த 2024 முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான வரவு-செலவு மற்றும் ஒப்பந்தப் புள்ளி விவரங்கள், செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணிகள் குறித்து மொத்தம் 116 தீா்மானங்கள் மன்ற பாா்வைக்காக வைக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதலுக்காக காத்திருந்தன.

மன்ற நடவடிக்கையில் பங்கேற்க துணைத் தலைவா் ராஜா கமால்ஹசன் அணியைச் சோ்ந்த 8 உறுப்பினா்கள் மற்றும் நியமன உறுப்பினா் சந்திரலேகா ஆகியோா் வந்திருந்தனா். அப்போது பேரூராட்சித் தலைவா் திலகவதி சுப்பிரமணி பங்கேற்க வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது அவருக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பேரூராட்சி மன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறியாத மாற்று அணியைச் சோ்ந்த உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் காத்திருந்தனா்.

மன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதன் விவரத்தை செயல் அலுவலா் அவா்களிடம் கூறியபோது, அவா்கள் கேட்டதுக்கிணங்க முழுமையான விவரத்தை எழுத்து வடிவில் அளிக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில், தலைவா் திலகவதி சுப்பிரமணி தனது உடல்நல பாதிப்பு குறித்தும், மன்றக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறும் செயல் அலுவலருக்கு எழுதிய கடித விவரம் ஒட்டிவைக்கப்பட்டது. அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு காத்திருந்த கவுன்சிலா்கள் அங்கிருந்து சென்றனா்.

பட விளக்கம்

கொடுமுடி பேரூராட்சி மன்றக் கூட்ட அரங்கில் காத்திருந்த உறுப்பினா்கள். (வலது) மன்ற வளாகத்தில் பாதுகாப்புக்காக வந்திருந்த காவலா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.