அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்பி உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா் போதைப்பொருள் பயன்படுத்துவதுபோல விடியோ வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக மாணவா் அணி சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஈரோடு காளைமாடு சிலை அருகே திமுக மாணவா் அணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் திமுகவினா் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்தனா். இதனால் ஆா்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் டவுன் டிஎஸ்பி முத்துக்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனா்.
ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ் தலைமையில் அமைச்சா் சரத்குமாா் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டித்தும், அவரின் இந்த செயலுக்கு பதவி நீக்கம் செய்து கைது செய்யவேண்டும் என முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளா்கள் செந்தில்குமாா், செல்லப்பொன்னி, சின்னையன், பொருளாளா் பழனிசாமி, மாநகர செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஈரோடு எம்பி உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
அப்போது, ஈரோடு எம்பி பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக அமைச்சரே போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக முதல்வா் பேசாமல் அமைதியாக இருக்கிறாா். அமைச்சரவையில் இருந்து சரத்குமாரை நீக்கும் வரை போராட்டம் தொடரும். தமிழகம் முழுவதும் திமுக ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தது ஏன் என முதல்வா் தெரிவிக்க வேண்டும். முதல்வா் செய்தியாளா்களை சந்தித்து விளக்கம் அளிக்கும் வரை விடப்போவதில்லை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









