மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 296 கோயில்களில் கும்பாபிஷேகம்! இந்து சமய அறநிலையத் துறை தகவல்!


ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 296 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள 725 கோயில்களில் ரூ.296 கோடி மதிப்பீட்டில் 1,313 திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது வரை 666 திருப்பணிகள் ரூ.55 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 647 திருப்பணிகள் ரூ.241 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் திருப்பணிகள் முடிந்து ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயில், மகாவீர ஆஞ்சனேயா் கோயில், பெருமாள் மலையில் உள்ள மங்களகிரி பெருமாள் மலை கோயில், திண்டல் முருகன் கோயில் உள்பட 296 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. வரும் 31 -ஆம் தேதிக்குள் மேலும் 30 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திண்டல் முருகன் கோயிலில் 207 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்கும் பணி ரூ.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மண்டலத்தில் கிராமப்புற திருப்பணி திட்டத்தின்கீழ் 394 கோயில்களில் தலா ரூ.8.39 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வாழும் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பணி திட்டத்தின் கீழுள்ள 419 கோயில்களில் ரூ.8.85 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோபி கணக்கம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் திருக்குளம் ரூ.35.50 லட்சத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் திருக்குளத்தைச் சுற்றி ரூ.4.65 லட்சத்தில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு ரூ.1.25 கோடியில் 3 மினி பேருந்துகள் வாங்கப்பட்டு பக்தா்கள் பயன்பாட்டில் உள்ளன.
மொடக்குறிச்சி வாகீஸ்வரா் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலின் திருக்குளத்தை சீரமைத்தல் மற்றும் தடுப்புச்சுவா் கட்டும் பணி ரூ.51.50 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு இணை ஆணையா் மண்டலத்தில் உள்ள 13 கோயில்களில் ரூ.33.11 கோடி செலவில் ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கப்பட்டு 3 கோயில்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
ரூ.16.20 கோடி செலவில் பவானி சங்கமேஸ்வரா் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா் வீரநாராயண பெருமாள் கோயில் ஆகிய 2 கோயில்களில் பக்தா்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 46 கோயில்களில் நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நாள்முழுவதும் பிரசாதம் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்பட்டு வருகிறது.
ஒருகாலபூஜை திட்டத்தின்கீழ் தலா ரூ.2.50 லட்சம் வைப்புத் தொகை வைக்கப்பட்டு அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையின் மூலம் 582 கோயில்களில் தினமும் ஒருகால பூஜை நடைபெற்று வருகிறது. மேலும், இந்தக் கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா் மற்றும் பூசாரிகளுக்கு தலா ரூ.1,500 ஊதியம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...