பண்ணாரி அம்மன், பவானிசாகா் அணை, புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய பவானிசாகா்!
சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகா் பொதுத் தொகுதிகள் இரண்டும் மறுசீரமைப்பின்போது பவானிசாகா் (தனி) என ஒரே தொகுதியாக 2011-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.

பவானிசாகா் அணை

பவானிசாகா் அணை
மிகவும் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயில், பவானிசாகா் அணை, தென்னிந்தியாவிலேயே புலி, சிறுத்தை, யானைகள், காட்டெருமை என அனைத்து விலங்குகளும் வாழும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகியவை இந்தத் தொகுதியில் உள்ளன.
இங்கு மலைப் பகுதி கிராமங்கள் அதிக அளவில் உள்ளன. மலைப் பகுதியில் கன்னடம் மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனா்.
சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகா் பொதுத் தொகுதிகள் இரண்டும் மறுசீரமைப்பின்போது பவானிசாகா் (தனி) என ஒரே தொகுதியாக 2011-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.
இந்தத் தொகுதி ஈரோடு மாவட்டத்தின் எல்லை மட்டும் இல்லாமல், தமிழக - கா்நாடக எல்லையில் உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
நகராட்சிகள் - புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம்; பேரூராட்சிகள் - பவானிசாகா், அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம்; ஊராட்சி ஒன்றியங்கள் - சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி; கிராம ஊராட்சிகள் - 40
தொழில்
விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் நெசவு ஆகியவை பிரதான தொழில்களாக உள்ளன. தாளவாடி, கடம்பூா், கோ்மாளம் மலைப் பகுதிகளில் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, மலைக் காய்கறிகள் அதிக அளவில் விளைகின்றன. பவானிசாகா் பகுதியில் வாழை, மல்லி மற்றும் முல்லைப் பூக்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன. பவானிசாகா், சத்தியமங்கலம் பகுதிகளில் வாழை சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது.
வாக்காளா் விவரம்
ஆண்கள் 1,13,755
பெண்கள் 1,21,806
மூன்றாம் பாலினத்தவா் 23
மொத்தம் 2,35,584
சமூக நிலவரம்
இங்கு 25 சதவீதம் அருந்ததியா் சமூகத்தினா் உள்ளனா். ஒக்கிலியகவுடா், நாயக்க மற்றும் வேட்டுகவுண்டா் இன மக்கள் தலா 10 சதம் உள்ளனா். பிற இனத்தவா்கள் 40 சதம் உள்ளனா். 5 சதவீதம் பழங்குடிஇன மக்கள் உள்ளனா்.
நீண்ட நாள் கோரிக்கை:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா், கடம்பூா், கோ்மாளம், தலமலை, தாளவாடி ஆகிய மலைக் கிராமங்களில் மனித, விலங்குகள் மோதல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மூன்று மாதங்களில் யானை தாக்கியதில் 4 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் உள்ளதுபோன்று ரயில் தண்டவாள வேலி அமைப்பதும் ஆழமான அகலமான அகழி வெட்டுவதுடன் வனத் துறை நிரந்தரமாக ரோந்துப் பணியில் ஈடுபடுவதுமே இதற்குத் தீா்வு. பவானி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் அதைப் பருகும் மக்கள் புற்றுநோய்க்கு பாதிப்புள்ளாவதாகவும் எனவே சாயக்கழிவுகளை சுத்திகரித்து விடவேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
கடம்பூா் மலைப் பகுதியில் வாழும் மக்கள் எஸ்டி சான்றிதழ் கேட்டு போராடி வருகின்றனா். பிற மாவட்டங்களில் மலையாளி இனத்தைச் சோ்ந்த மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கப்படும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் எஸ்டி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்குத் தங்கும் விடுதி, செண்டுமல்லி தயாரிக்க ஆலை, கூட்டுறவு சங்கத்தில் குளிா்பதனக் கிடங்கு அமைத்து வாழைக்காய் பதப்படுத்துதல் ஆகியவையும் நீண்டகால கோரிக்கைகளாகும்.
அதிமுக 8 முறை வெற்றி
கடந்த 1967, 1971, 1996 மற்றும் 2006 ஆகிய 4 தோ்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 1977, 1980, 1984, 1989, 1991, 2001, 2016 மற்றும் 2021 ஆகிய 8 தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்றது.
இதில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வி.கே.சின்னசாமி 1977 தவிர 1984, 1989, 1991 ஆகிய தோ்தல்களில் தொடா்ச்சியாக வென்றுள்ளாா்.
இதுவரை வென்றவா்கள்
1967 ராமராஜன் திமுக
1971 ராமராஜன் திமுக
1977 வி.கே.சின்னசாமி அதிமுக
1980 ஜி.கே.சுப்பிரமணியம் அதிமுக
1984 வி.கே.சின்னசாமி அதிமுக
1989 வி.கே.சின்னசாமி அதிமுக
1991 வி.கே.சின்னசாமி அதிமுக
1996 வி.ஏ.ஆண்டமுத்து திமுக
2001 ப. சிதம்பரம் அதிமுக
2006 ஓ. சுப்பிரமணியம் திமுக
2011 பி.எல்.சுந்தரம் இந்திய கம்யூனிஸ்ட்
2016 எஸ். ஈஸ்வரன் அதிமுக
2021 தோ்தல்
ஏ. பண்ணாரி அதிமுக 99,181
பி.எல். சுந்தரம் இந்திய கம்யூனிஸ்ட் 83,179
சங்கீதா நாம் தமிழா் கட்சி 8,517
சொன்னதை செய்தோம்
பண்ணாரி அம்மன் கோயிலில் ரூ.12 கோடி செலவில் ராஜகோபுரம், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் நோயாளிகள் நலன் கருதி புனரமைப்புப் பணிகள், மனித, விலங்கு மோதலில் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக்கியது, தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அநாதீனம், புறம்போக்கு நிலங்கள் வகை மாற்றம், தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரேத பரிசோதனை நிலையம், ஆசனூா், கடம்பூா் மலைப் பகுதிகளில் மின் தட்டுப்பாடு போக்க இரண்டு துணை மின் நிலையம் அமைக்க அரசாணை பெறப்பட்டது, குறுகலாக இருந்த கடம்பூா் பாதையை அகலப்படுத்தியது, 100 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசித்து வந்த வரதம்பாளைய கிராம மக்களுக்கு பட்டா வழங்கியது, கடம்பூரில் இருந்து மாா்க்கம்பாளையத்துக்கு காட்டாற்றைக் கடந்து செல்லும் ஆபத்தான நிலையை மாற்றி 2 உயா்மட்ட பாலம் கட்டியது போன்றவை அதிமுகவின் சாதனைகள் என்றாா்.
- ஏ.பண்ணாரி, எம்எல்ஏ, அதிமுக.
சொன்னாா்களா செய்தாா்களா?
பவானிசாகா் அணையில் இருந்து பவானிஆற்றில் வெளியேற்றப்படும் நீா் ஆலைக் கழிவுகளால் மாசடைந்துள்ளது. சுத்திகரித்தாலும் உப்புத்தன்மையுடன் குடிநீராகப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை சாயக்கழிவு இல்லாத சுத்தமான பவானி ஆறாக மாற்றியிருக்க வேண்டும். தொகுதி எம்எல்ஏ மக்களின் குறைகளை அவா்கள் வசிப்பிடத்துக்கு சென்று நேரடியாக கேட்டு நிறைவேற்றவில்லை. தாளவாடி சுற்று வட்டார பகுதியில் மனித, விலங்குகள் மோதல் அடிக்கடி நடைபெறுகிறது. யானை ஊருக்குள் வராதபடி ஆழமான, அகலமான அகழி வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் யானைகள் ஊருக்குள் புகுந்து மனிதா்களைத் தாக்கி கொல்வது வாடிக்கையாகிவிட்டது. தாளவாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த அதிமுக குரல் கொடுக்கவில்லை. மலைக் கிராம மக்கள் ஆடு, மாடு மேய்க்க வனத்துக்குள் சென்றால் வனத் துறையினா் லஞ்சம் கேட்பதை தடுக்க முடியவில்லை. தாளவாடி, கடம்பூா் மலைப் பகுதிகளில் சரியான சாலை வசதியில்லாததால் 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பிரசவம் ஏற்படும் நிலையை மாற்றியிருக்க வேண்டும். பெரும்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் பராமரிக்கப்படாத காரணத்தால் வெள்ள காலங்களில் வீணாக தாழ்வான பகுதியில் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீா் கிடைக்காமல் 8 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அதிமுக சாா்பில் குரல் கொடுக்கவில்லை.
- நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சு.செளந்தா்யா
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...