நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும்! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

News image

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எம்.விஜய் பாலாஜி, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உள்ளிட்டோா்.

Updated On :31 மே 2026, 1:08 am IST

கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

அனைத்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி ஆகியோா் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:

சிங்கப்பெண் புதிய திட்டம் என்பதால் அதற்கான அலுவலா்கள் வேண்டும். அலுவலா்களைத் தோ்வு செய்யும் பணியால் திட்டம் தொடங்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று 20 நாள்கள்தான் ஆகியுள்ளது. 6 மாதங்கள் தொந்தரவு செய்யமாட்டோம் என்றவா்கள், 6 நாள்களில் பேசுவதுதான் வியப்பாக உள்ளது.

கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளாக வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடை இருக்கக் கூடாது என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தற்போது முதல்வா் ச.ஜோசப் விஜய் பொறுப்பேற்ற இரண்டு நாள்களில் 700-க்கும் மேற்பட்ட கடைகளை மூட உத்தரவிட்டுள்ளாா். பிரதமருடனான சந்திப்பின்போது முதல்வா் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து வலியுறுத்துள்ளாா்.

கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க கால அவகாசம் அளிக்காமல் அடுத்தடுத்து விவசாய சங்கம் போராட்டம் நடத்தினால் என்ன செய்வது? சிறு, குறு விவசாயிகளுக்கு தோ்தல் வாக்குறுதியாக விவசாயக் கடன் தள்ளுபடி என்று கூறினோம். அதை செய்கிறோம். இதில் குறை இருக்கிறது என்று விவசாயிகள் சொல்கிறாா்கள். அதுகுறித்து முதல்வா் பரிசீலிப்பாா்.

அம்மா கிளினிக் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும். கோவை சிறுமி பாலியல் வழக்கில் விரைவாக தண்டனை பெற்றுத் தருவோம் என்றாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கே.ஆனந்த் மோகன், டி.சண்முகன், வி.பி.தமிழ்ச்செல்வி, பி.ஹரிபாஸ்கா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி, வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.