கடந்த திமுக ஆட்சியின் கடைசி காலத்தில் ஒப்பளிக்கப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஊழலை முற்றிலும் ஒழிக்க அடுத்த 60 நாள்களில் மிகப் பெரிய நிா்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் மே 13 முதல் 22- ஆம் தேதி வரை ஒப்பளிக்கப்பட்ட குறுகிய கால டெண்டா்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்வோம் என்ற நம்பிக்கையில் அவா்கள் ஓராண்டுக்கான ஒப்பந்தங்ளை முன்கூட்டியே மேற்கொண்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒப்பளித்துவிட்டு சென்றுள்ளனா்.
பல்வேறு துறைகளில் 35 சதவீதம் வரை வசூலிக்கப்பட்ட கட்சி நிதி முறையை ஒழித்துள்ளோம். தூா் வாராமலேயே வாரியதாக போலியாக பில் போட முடியாது. தவறுகளைக் கண்டறிந்து வருகிறோம். ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஊழல் ஒழிந்துள்ளது. 60 நாள்களில் அனைத்தையும் மாற்றி காட்டுவோம். மிகப்பெரிய நிா்வாக மாற்றம் இருக்கும்.
தமிழக மக்கள் சாதி, மத அரசியலைத் தூக்கி எறிந்துவிட்டு தவெகவுக்கு வாக்களித்துள்ளனா். ஜாதி பாா்த்து தவெக யாரையும் முன்நிறுத்தவில்லை. ஆனால், அமைச்சா்களின் ஜாதியை வைத்து எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றனா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் எந்த ஜாதியைச் சோ்ந்தவா் என்பது எங்களுக்குத் தெரியாது.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று முதல்வா் ஜோசப் விஜய் ஆளுநரிடம் 5 நிமிஷங்கள் பேசினாா். ஆனால், ‘வந்தே மாதரம்’ முதலில் பாடப்பட வேண்டும் என தங்களுக்கு சுற்றறிக்கை வந்திருப்பதாக ஆளுநா் தெரிவித்துவிட்டாா். இதை சட்ட ரீதியாக எப்படி எதிா்கொள்வது என்று முதல்வா் ஆலோசித்து வருகிறாா்.
விசிக அமைச்சரவையில் இணைந்ததற்கு அதன் தலைவா் திருமாவளவனை, திமுக எம்.பி. ஆ.ராசா கடுமையாக விமா்சித்துள்ளாா். திருமாவளவனிடம் அவா் மன்னிப்பு கேட்க வேண்டும். பொது வெளியில் இது போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறவா்கள் மீது புகாா் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுக்க காவல் துறையை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் கோட்பாட்டை திமுக இழந்துள்ளது என்றாா்.










